2026ல் பா.ம.க., இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமையும் பா.ம.க., தலைவர் அன்புமணி கணிப்பு
2026ல் பா.ம.க., இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமையும் பா.ம.க., தலைவர் அன்புமணி கணிப்பு
ADDED : டிச 28, 2024 07:47 PM
வானுார்:பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் அன்புமணி பேசியதாவது;
வரும் 2025ம் ஆண்டு நாம் அர்ப்பணிப்போடு பணியாற்றினால், 2026ம் தேர்தலில் வெற்றி பெறுவோம். நம்மிடம் மக்கள் பலம், இளைஞர் சக்தி, கட்சியின் கொள்கை, தலைமை உள்ளது. ஆனால் நமக்கு தேர்தல் வாயிலாக அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இந்த ஆட்சியில் நிர்வாகம் சரியில்லை. முதற்கட்டமாக 120 தொகுதிகளை தேர்வு செய்து, தேர்தல் பணியாற்ற உள்ளோம். அடுத்த கட்டமாக 114 தொகுதிகளில் பணியாற்ற உள்ளோம். தமிழகத்தில் நாம் சொல்வது பேசுபொருளாக மட்டுமில்லாமல், கொள்கை முடிவை மாற்றி அமைக்கும் வகையில் அமைந்துள்ளது.
10.5 சதவீத இட ஒதுக்கீடே தவறானது. நாம் கேட்பது 20 சதவீதம். அதிகாரப்பூர்வமாக அன்று எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், வன்னிய சமூகம் 14 சதவீதமாக இருந்தது. இந்த இட ஒதுக்கீடு பெற, கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் 37 முறை பலகட்ட போராட்டங்கள் மற்றும் முதல்வரை சந்தித்து பேசியுள்ளோம்.
ஆனால், சிலர் தேர்தலுக்காக இட ஒதுக்கீடை கையில் எடுத்துள்ளதாக கூறுகின்றனர்.
இட ஒதுக்கீடு குறித்து முதல்வரிடம் பேசும்போது, நிச்சயமாக செய்து கொடுக்கிறேன் என்று கூறுவார். தனியாக கூட்டத்தொடர் நடத்திய முதல்வர், இந்த இட ஒதுக்கீடை கொடுப்போம் என்றார் .
அதன் பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இதைப்பற்றி பேசினால், ராமதாசுக்கு வேலை இல்லை என்று முதல்வர் கூறுகிறார். வேலை இல்லாமலா உங்களை துணை முதல்வராக்கினார். வேலை இல்லாமலா கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய தொடுக்கப்பட்ட வழக்கை திரும்பப் பெற்றார்.
திருவண்ணாமலையில் நாம் நடத்திய உழவர் பேரியக்க மாநாடு போல, இந்தியாவில் வேறெங்கும் நடத்தப்படவில்லை. இவை அனைத்தும் நாம் ஒரு மாதத்தில் நடத்தினோம். இம்மாநாட்டில், 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடினர். பா.ம.க., சார்பில் வைக்கப்படும் பேனரில் ராமதாஸ் படம் மட்டும் போடுங்கள். என் படம் உட்பட யார் படமும் போட வேண்டாம். இதற்காக கட்சியில் குழப்பம் விளைவிக்க வேண்டாம். தமிழகத்தில் 2026ல் கூட்டணி ஆட்சிதான் அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.