'தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டால் பயனில்லை: ராமதாஸ்
'தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டால் பயனில்லை: ராமதாஸ்
UPDATED : ஜன 31, 2024 03:11 PM
ADDED : ஜன 31, 2024 02:04 AM

வானுார்: ''தமிழக அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக தாக்கல் செய்த வேளாண் நிதி நிலை அறிக்கையால் எந்த பயனுமில்லை'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில், நேற்று பா.ம.க., சார்பில் 2024-25ம் ஆண்டிற்கான நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடப்பட்டது. கூடவே வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையையும் வெளியிட்டார்.
பின் ராமதாஸ், அளித்த பேட்டி:
வேளாண் வளர்ச்சியில்லாமல் வறுமையை ஒழிக்க முடியாது. இதைக் கருத்தில் கொண்டே வேளாண் வளர்ச்சித் திட்டங்களை உள்ளடக்கிய வேளாண் நிழல் நிதி நிலை அறிக்கையை கடந்த 17 ஆண்டுகளாக பா.ம.க., வெளியிட்டு வருகிறது.
இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் செய்யாத இக்காரியத்தை பா.ம.க., சாதனையாகவே கருதுகிறது. தமிழக அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கையில், 70 சிறப்புத் திட்டங்கள் இடம் பெற்றிருந்தன. இதில் 7 திட்டங்கள் கூட செயல்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. இதை அதிகரிப்பதற்கான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.
புதிய பாசனத் திட்டங்களும் இடம்பெறவில்லை. இதனால் தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளில் தாக்கல் செய்த வேளாண் நிதி நிலை அறிக்கையால் எவ்வித பயனும் ஏற்படவில்லை. தமிழகத்துக்கு வேளாண் துறையை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி தேவையாக உள்ளது. எனவே, தமிழக அரசு வேளாண் வளர்ச்சியை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.