பா.ம.க.,வின் மறுபிறப்பு என் கடைசி யுத்தம்: ராமதாஸ்
பா.ம.க.,வின் மறுபிறப்பு என் கடைசி யுத்தம்: ராமதாஸ்
ADDED : டிச 28, 2025 04:46 AM

சென்னை: சேலத்தில் நாளை நடக்கும் பொதுக்குழு தொடர்பாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:
பா.ம.க.,வில் நடக்கும் சண்டை, நான் பெற்றெடுத்த இயக்கத்தின் ஆன்மாவை காப்பாற்றும் போர். கடந்த சில வாரங்களாக அன்புமணி கும்பலில் உள்ள சிலர், 'ராமதாசுக்கு வயதாகி விட்டது. புத்தி பேதலித்து விட்டது. சுயநினைவு இல்லாமல் பேசுகிறார்' என, என்னை அசிங்கப்படுத்துகின்றனர்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் என் வியர்வையை, ரத்தத்தை சிந்தி, நான் கட்டிய மக்கள் கோட்டை தான் பா.ம.க., இன்று என் கண் முன்னால், பலவீனமாக இருப்பதை கண்டு, பெற்ற வயிறு பற்றி எரிகிறது. என் மகன் அன்புமணியை நம்பினேன். நான் செய்த தவறுகளில் ஒன்று, அன்புமணியை எம்.பி.,யாக்கியது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, அன்பு மணியின் ராஜ்யசபா வருகை, 30 சதவீதம் மட்டுமே. ராஜ்யசபா விவாதங்களில் ஏழு முறை மட்டுமே பேசியுள்ளார். எம்.பி., பதவியை வீணடித்தது போலவே, கட்சித் தலைவரான பின், சரியாக களப் பணியாற்றவில்லை.
ஒரு காலத்தில், 20 எம்.எல்.ஏ.,க்கள் இருந்த பா.ம.க., இன்று அங்கீகாரத்தையே இழந்துள்ளது. கட்சியை காப்பாற்ற சில உறவுகளை தள்ளி வைத்துள்ளேன். பா.ம.க., தலைமை பதவியே நீதிமன்றத்தில் உள்ளது. அஸ்திவாரத்திலேயே சந்தேகம் வந்தால் கட்டடம் எப்படி நிற்கும்?
சேலத்தில் நாளை நடக்கும் பொதுக்குழு, பா.ம.க.,வின் மறு பிறப்பு. வரும் சட்டசபை தேர்தலில், 25 தொகுதிகளில் வெ ன்று, பா.ம.க., சின்னத்தையும், அங்கீகாரத்தையும் மீட்டெடுக்க வேண்டும். தந்திரங்களுக்கு ஏமாந்து போகாதீர்கள். எனக்கு வயதாகி விட்டது. இதுதான் என் கடைசி யுத்தமாக கூட இருக்கலாம்.
ஆனால், கடைசி மூச்சு இருக்கும் வரை அறத்தோடு போராடுவேன். சேலத்தில் நடக்கும் பொதுக்குழுவுக்கு பா.ம.க., நிர்வாகிகள் அனைவரும் வர வேண்டும். இது, பா.ம.க.,வை காப்பாற்ற கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பு.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

