சிறுமி கர்ப்பம்; 4 பேர் மீது வழக்கு
ஈரோடு: ஈரோடு மாவட்டம், சூரம்பட்டியை சேர்ந்தவர் தினேஷ், 19; கூலி தொழிலாளி. ஈரோடை சேர்ந்த, 17 வயது சிறுமியை, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார். தற்போது சிறுமி கர்ப்பமாக உள்ளார். ஈரோடு போலீசார் விசாரணை நடத்தி, தினேஷ், அவரது தாய் கவுரி, சிறுமியின் பெற்றோர் என, நான்கு பேர் மீது, குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி
அரியலூர்: அரியலுார் மாவட்டம், மலங்கன்குடியிருப்பு மேலத்தெருவை சேர்ந்தவர் மாரியப்பன், 26; கூலி தொழிலாளி. இவர், 17 வயது சிறுமியை, இரு ஆண்டுகளாக காதலித்து, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சிறுமி தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார். சிறுமி புகாரில், ஜெயங்கொண்டம் போலீசார், போக்சோ சட்டத்தில், மாரியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே, நல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி, 31. இவர், அதே ஊரைச் சேர்ந்த உறவினரான, 15 வயது சிறுமியை, ஜூன், 6ல் தன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அன்றே, சிறுமிக்கு தாலிகட்டி, அவரிடம் தவறாக நடந்துள்ளார். இதை, தன் தாயிடம் சிறுமி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம், நன்னிலம் போலீசில் சிறுமி புகார் செய்தார். போலீசார், முரளி மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பள்ளி தற்காலிக ஆசிரியர் கைது
அரியலுார்: அரியலுார் மாவட்டம், மணப்பத்துார் கிராமத்தில் தங்கி, வங்காரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருபவர் செல்வராஜ், 43. சில நாட்களுக்கு முன், அப்பள்ளியில் பயிலும், 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவியருக்கு, அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம், பள்ளியை இழுத்து பூட்டி, ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி, மாணவியரின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தளவாய் போலீசார், செல்வராஜை நேற்று போக்சோவில் கைது செய்தனர்.
பிளஸ் 2 மாணவிக்கு தொல்லை
திருநெல்வேலி: திருநெல்வேலி, மேலப்பாளையத்தை சேர்ந்த, 17 வயது மாணவி, பிளஸ் 2 படிக்கிறார். இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில், ராமநாதபுரம் மாவட்டம், காஞ்சிரங்குடியை சேர்ந்த மாதேஸ்வரன், 23, என்பவருடன் பழகி வந்தார். 'ஏசி' மெக்கானிக் வேலை பார்த்த அவர், திருநெல்வேலி வந்து சிறுமியை ஆசை வார்த்தை கூறி, ராமநாதபுரம் அழைத்து சென்றுள்ளார். மேலப்பாளையம் போலீசார் சிறுமியை மீட்டனர். அவரை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக மாதேஸ்வரனை போக்சோவில் கைது செய்தனர்.
10 வயது குழந்தை பலாத்காரம்
வேலுார்: வேலுாரை சேர்ந்தவர் தொழிலாளி கணேஷ், 34. இவரது மனைவியின் தோழி ஒருவர், சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். அவருக்கு, மூன்று மகன்கள், 10 வயதில் மகள் உள்ளனர். குழந்தைகளின் தந்தை கூலி வேலை செய்வதால், மகளை மட்டும் தன் வீட்டில் தங்கி படிக்க கணேஷின் மனைவி ஏற்பாடு செய்தார்.
கடந்த மாதம், வீட்டில் அனைவரும் துாங்கிய பின், சிறுமியை கணேஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்த ஒருவர், குழந்தைகள் உதவி மைய எண்ணிற்கு நடந்த விபரங்களை தெரிவித்துள்ளார். வேலுார் போலீசார் கணேஷை போக்சோவில் கைது செய்தனர்.