ADDED : ஜன 03, 2024 10:42 PM

மூணாறு:மூணாறு - போடிமெட்டு ரோட்டை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி நாளை (ஜன.,5ல்) அதிகார பூர்வமாக திறந்து வைப்பதற்கு விழா நடத்த மெகா சைஸ் பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில் அவர் காணொலி காட்சியில் திறந்து வைக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு - போடிமெட்டு இடையே உள்ள 42 கி.மீ., ரோடு இருவழிச் சாலையாக ரூ.381.76 கோடி செலவில் அகலப்படுத்தப்பட்டது. அப்பணிகள் 2017 செப்டம்பரில் துவங்கின. பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகின்றன. தற்போது அவ்வழியில் வாகனங்கள் சென்று வரும் நிலையில் ரோட்டை அதிகாரப்பூர்வமாக மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின்கட்கரி திறப்பதாக இருந்தது.
விழா நடத்துவதற்காக கடந்தாண்டு ஆக. 17, அக்.12, நவ. 6 ஆகிய 3 நாட்கள் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு காரணங்களால் விழா தள்ளி வைக்கப்பட்டது.
இந்த ரோட்டை மத்திய அமைச்சர் நிதின்கட்கரி ஜன.,5 ல் (நாளை) மூணாறில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு பழைய மூணாறில் கே.டி.எச்.பி., கம்பெனிக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தில் மெகா சைஸ் பந்தல் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
காணொலியில் திறப்பு
இந்நிலையில் நாளை காசர்கோட்டில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அமைச்சர், அங்கிருந்து காணொலி காட்சி வாயிலாக மூணாறு -போடிமெட்டு ரோட்டையும், இடுக்கி அருகே செருதோணியில் 2018ல் பேரழிவில் சேதமடைந்து சீரமைக்கப்பட்ட பாலத்தையும் திறந்து வைக்கிறார் என நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.