ADDED : நவ 23, 2025 01:35 AM

சென்னை: சாகித்ய அகாடமி விருது பெற்ற, கவிஞர் ஈரோடு தமிழன்பன், 92, நேற்று காலமானார்.
வயது முதிர்வு காரணமாக, அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. அவருக்கு, சமீபத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில், 1933ல் பிறந்தார் தமிழன்பன். இவர், கரந்தை தமிழ் கல்லுாரியிலும், அண்ணாமலை பல்கலையிலும் படித்தவர். 'தனிப்பாடல் திரட்டு ஓர் ஆய்வு' எனும் தலைப்பில் ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்றார்.
ஈரோட்டில் மதரசா இஸ்லாமியா உயர்நிலை பள்ளியில், ஆசிரியராக பணியை துவக்கி, சென்னை புதுக்கல்லுாரியில், தமிழ் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர், தமிழக அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். இவரது கவிதை தொகுப்பான, 'வணக்கம் வள்ளுவ' நுாலுக்காக, 2004-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
ஈரோடு தமிழன்பனின் மறைவுக்கு, துணை முதல்வர் உதயநிதி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள், எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவரது இறுதி சடங்குகள், அரும்பாக்கத்தில் உள்ள மின் இடுகாட்டில், இன்று காலை 10:30 மணியளவில் நடக்கும் என, அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

