வெளிமாநிலங்களில் பதுங்கிய குற்றவாளிகளை விமானத்தில் சென்று பிடிக்க போலீசுக்கு அனுமதி
வெளிமாநிலங்களில் பதுங்கிய குற்றவாளிகளை விமானத்தில் சென்று பிடிக்க போலீசுக்கு அனுமதி
ADDED : மே 02, 2025 06:22 AM

சென்னை : 'வழக்கில் சிக்கி வெளி மாநிலங்களில் பதுங்கியுள்ள நபர்களை அங்கு சென்று கைது செய்ய போலீசார் விமானத்தில் செல்லலாம்' என அரசு அறிவித்துள்ளது போலீசாரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்யும், சைபர் குற்றவாளிகளில் 90 சதவீதம் பேர் வெளிமாநிலங்களில் இருந்து செயல்படுகின்றனர். அதேபோல மோசடி நிதி நிறுவனங்கள் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த பின் அதன் இயக்குநர்கள் வெளி மாநிலங்களுக்கு ஓட்டம் பிடித்து விடுகின்றனர். சொத்து அபகரிப்பு, பாலியல் தொல்லை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோரும் வெளி மாநிலங்களுக்கு தப்பி விடுகின்றனர்.
அவர்களை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். போலீசார் வெளி மாநிலங்களுக்கு சென்று அவர்களை கைது செய்ய உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறுவதில் நடைமுறை சிக்கல்கள் இருந்தன. இதனால் மாதங்கள் கடந்தும் போலீசார் வெளி மாநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.
இதற்கு தீர்வு காண 'வழக்குகளை துப்பு துலக்கவும், அதில் சிக்கிய நபர்களை கைது செய்யவும், விசாரணை அதிகாரிகள் மற்றும் போலீசார் வெளி மாநிலங்களுக்கு விமானத்தில் பறந்து செல்ல அனுமதி அளிக்கும் அதிகாரம், டி.ஜி.பி.,க்கு வழங்கப்படும்' என்று சட்டசபையில் முதல்வர் அறிவித்தார். இது போலீசாரிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: வெளிமாநிலங்களுக்கு சென்று வழக்கில் சிக்கிய நபர்களை கைது செய்ய துணை கமிஷனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மட்டுமே விமானத்தில் செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ரயிலில் செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது போலீசாரும் விமானத்தில் செல்லலாம் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதற்காக டி.ஜி.பி.,க்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.