தி.மு.க., ‘மாஜி’ எம்.எல்.ஏ.,வை 4 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி
தி.மு.க., ‘மாஜி’ எம்.எல்.ஏ.,வை 4 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி
UPDATED : நவ 12, 2026 09:47 PM
ADDED : நவ 12, 2026 09:44 PM

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க, லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்குமாரை, நான்கு நாள் காவலில் எடுத்து விசாரிக்க, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியில், தனியார் பள்ளி கட்டடங்களுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க, 400 கோடி ரூபாய் வரை பணம் பெற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு உதவியாளர் போல செயல்பட்டவரும், வழக்கின் முக்கிய குற்றவாளியுமான தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., முத்துகுமார், நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஏற்கனவே, மகேஷை, மூன்று நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர் .
இதையடுத்து, முத்துகுமாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, மத்திய குற்றப்பிரிவு போலீசார், சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 5ம் தேதி மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி சத்தியமூர்த்தி, நேற்று பிறப்பித்த உத்தரவு:
முத்துகுமாரை, நவ.,12 முதல் 16 காலை 10:30 மணி வரை, நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, போலீசாருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. விசாரணைக்கு முன் மற்றும் விசாரணை முடிந்த பின், அவரை மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டும்.
விசாரணையின்போது வழக்கறிஞர் உடனிருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. விசாரணை முடிந்து, 16ம் தேதி காலை 10:30 மணிக்கு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
