மோடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் 269 பேரை கைது செய்தது போலீஸ்
மோடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் 269 பேரை கைது செய்தது போலீஸ்
ADDED : ஏப் 07, 2025 01:15 AM

ராமநாதபுரம்: பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவிற்கு வந்த பிரதமர் மோடியை கண்டித்து, கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்த காங்., மற்றும் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழத்தை சேர்ந்த, 269 பேரை போலீசார் கைது செய்தனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள, 80 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து, ராமநாதபுரம் அரண்மனை முன், கருப்பு கொடியுடன் காங்கிரஸ் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கருமாணிக்கம் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். காங்., நிர்வாகிகள், 106 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் ரயில் நிலையம் முன், கருப்பு கொடியுடன் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஹைதர்அலி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 144 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாம்பனின் அகில இந்திய மீனவர் காங்., தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் தலைமையில், கருப்பு கொடியுடன் வந்த 19 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்டத்தில், 269 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபங்களில் அடைத்து, மாலையில் விடுவித்தனர்.
புதுக்கோட்டையில், பிரதமர் மோடி வருகையை கண்டித்து காங்., கட்சி சார்பில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. இதில், 200க்கும் மேற்பட்ட காங்., கட்சியினர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

