சொன்னதை செய்யாத முதல்வர் ஸ்டாலின்; பதவி உயர்வு பாதிப்பதாக போலீசார் குமுறல்
சொன்னதை செய்யாத முதல்வர் ஸ்டாலின்; பதவி உயர்வு பாதிப்பதாக போலீசார் குமுறல்
ADDED : ஏப் 30, 2025 06:48 AM

சென்னை: தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அளித்த உறுதிமொழியை கூட நிறைவேற்றாமல், முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றி விட்டதாக, போலீசார் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழக காவல் துறையில், இரண்டாம் நிலை காவலராக பணியில் சேரும் ஒருவர், எவ்வித தண்டனையும் பெறாமல், 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால், அவருக்கு முதலாம் நிலை காவலர் என, பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
அவர், 15 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால், தலைமை காவலர் என்றும், 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால், சிறப்பு எஸ்.ஐ., என்றும், பதவி உயர்வும் வழங்கப்படுகிறது. இதில் உள்ள ஆண்டு வரம்பை குறைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக போலீசார் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு மற்றும் டி.ஜி.பி.,க்கு கடிதமும் அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில், சட்டசபையில் காவல் துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், காவலர்களுக்கு பதவி உயர்வுக்கான பணி வரம்பில், இரண்டு ஆண்டுகளை குறைத்து இருப்பதாக கூறியுள்ளார்.
போலீசார் கூறியதாவது:
கடந்த, 2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'இரண்டாம் நிலை காவலராக பணியில் சேருபவர்கள், ஏழு ஆண்டுகள் பணி நிறைவு செய்து இருந்தால் போதும்; முதல் நிலை காவலராக பதவி உயர்வு அளிக்கப்படும். அவர்கள், 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்திருந்தால், தலைமை காவலராகவும், 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்து இருந்தால், சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வும் வழங்கப்படும்' என, அறிவித்து இருந்தனர்.
ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளான போதிலும், இரண்டாம் நிலை காவலர்கள், 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால் முதல் நிலை காவலர்களாக பதவி உயர்வு அளிக்கப்படும் என்பதில், எந்த மாற்றமும் செய்யவில்லை.
இவர்கள், 15 ஆண்டுகள் பணி நிறைவு செய்து இருந்தால் தான், தலைமை காவலர் பதவி உயர்வு அளிக்கப்படும் என்ற நிலையை மாற்றி, அவர்கள், 13 ஆண்டுகள் பணி நிறைவு செய்திருந்தாலே போதும் என, இரண்டு ஆண்டுகளை மட்டுமே குறைத்துள்ளனர்.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை கூட நிறைவேற்றாமல், காவல் துறை மானியக் கோரிக்கையில், முதல்வர் எங்களை ஏமாற்றி உள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.