சேலத்தில் ராமநவமி ரத யாத்திரை நடத்த போலீஸ் அனுமதி மறுப்பு: ஐகோர்ட்டில் தகவல்
சேலத்தில் ராமநவமி ரத யாத்திரை நடத்த போலீஸ் அனுமதி மறுப்பு: ஐகோர்ட்டில் தகவல்
ADDED : ஏப் 02, 2025 06:44 AM

சென்னை : ராமநவமி தினத்தில், ஹிந்து மக்கள் கட்சி சார்பில், ராம ரத யாத்திரை நடத்த அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஹிந்து மக்கள் கட்சியின், சேலம் மாவட்ட தலைவர் டி.பெரியசாமி தாக்கல் செய்த மனு:
ராம நவமி பண்டிகை, வரும், 6ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஹிந்து மக்கள் கட்சி சார்பில், சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினத்தில் இருந்து ராம ரத யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சிறப்பு பூஜைகளுடன் அயோத்தியாபட்டினத்தில் ரத யாத்திரை துவங்கி, செவ்வாய்பேட்டை பாண்டுரங்கன் கோவிலில் நிறைவு பெறுகிறது.
இதற்கு அனுமதி கோரி, தமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு, மார்ச், 10ல் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த பதிலும் இல்லை. அமைதியான முறையில் நடக்கும் ரத யாத்திரைக்கு அனுமதி கோரிய மனுவை பரிசீலித்து, உரிய ஆணை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில், 'சேலம் அம்மாப்பேட்டை உதவி கமிஷனர், மார்ச் 31ம் தேதி, இந்த ராம ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்' என்று, தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, காவல் துறை அனுமதி வழங்க மறுத்ததை எதிர்த்து வழக்கு தொடரலாம் எனக்கூறி, வழக்கை முடித்து வைத்தார்.