போலீஸ் அவசர நடவடிக்கை எம்.எல்.ஏ., மகன் தரப்பு வாதம்
போலீஸ் அவசர நடவடிக்கை எம்.எல்.ஏ., மகன் தரப்பு வாதம்
ADDED : பிப் 02, 2024 11:15 PM
சென்னை:வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக, சென்னை பல்லாவரம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன், அவரது மனைவி மார்லினா ஆன் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, இருவரையும் திருவான்மியூர் போலீசார் கைது செய்தனர்.
இருவரும் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர் ஆஜராகி, ''மனுதாரர்கள் பணிப்பெண்ணை தாக்கி காயப்படுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் தொடர்பாக, இன்னும் விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.
புகாரளித்த பெண் சார்பில் வழக்கறிஞர் மோகன், ''வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவான வழக்கை, டி.எஸ்.பி., அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி தான் விசாரிக்க வேண்டும்.
''பணியாட்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் வழங்க வேண்டும் என, சட்டம் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 1 ரூபாய் கூட ஊதியம் தரவில்லை. 'போக்சோ' சட்ட பிரிவிலும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களின் பின்புலத்தில் முக்கிய நபர்கள் உள்ளனர்,'' என்றார்.
மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, ''பணிப்பெண்ணின் கல்விக்காக, 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ., மகன் என்பதால், சமூக ஊடகங்களால் ஏற்பட்ட அழுத்தத்தால், போலீசார் அவசர கதியில் செயல்பட்டுள்ளனர். வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் பின்புலத்தில் முக்கிய நபர்கள் இருந்தால் எப்படி கைது செய்யப்பட்டு இருப்பர்?'' என்றார்.
ஜாமின் மனு மீது 6ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்தார்.

