ஜாபர் சாதிக் மீது ஒரு வழக்கு தான் பதிவு போலீசார் விளக்கம்
ஜாபர் சாதிக் மீது ஒரு வழக்கு தான் பதிவு போலீசார் விளக்கம்
ADDED : மார் 08, 2024 10:35 PM
சென்னை:'சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர் ஜாபர் சாதிக் மீது, சென்னை போலீசில், ஒரே ஒரு வழக்கு தான் பதிவாகி உள்ளது' என, சென்னை மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.
தி.மு.க.,வில், சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக், 36, சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர் என தெரிய வந்துள்ளது. அவரை மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
'அவர் மீது, சென்னை மாநகர போலீசில், போதை பொருள் கடத்தல் தொடர்பாக, 26 வழக்குகள் பதிவாகி உள்ளன. 2013ல் கைதாகி உள்ளார்.
'போலீசார் அவரை கண்காணிக்க தவறிவிட்டனர். இதனால், போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவராக உருவெடுத்துவிட்டார்' என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. இதை சென்னை மாநகர போலீசார் மறுத்துள்ளனர்.
நேற்று இரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ஜாபர் சாதிக் மீது, 2013ல், எம்.கே.பி., நகர் காவல் நிலையத்தில், என்.டி.பி.எஸ்., எனப்படும் போதை பொருட்கள் தொடர்பாக ஒரு வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், 2017, மார்ச், 8ல், நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்' என, கூறப்பட்டுள்ளது.

