ஐகோர்ட் வளாகத்துக்குள் வெடிகுண்டு காவல்துறை விசாரிக்க அறிவுறுத்தல்
ஐகோர்ட் வளாகத்துக்குள் வெடிகுண்டு காவல்துறை விசாரிக்க அறிவுறுத்தல்
ADDED : டிச 13, 2024 01:15 AM
சென்னை:'ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் எப்படி கொண்டு வரப்பட்டது' என்பது குறித்து தனியாக விசாரணை நடத்தும்படி, காவல்துறையை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
சென்னை பெரம்பூரில் இந்தாண்டு ஜூலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், பொன்னை பாலு, ரவுடி நாகேந்திரன் உள்ளிட்ட 28 பேரை, போலீசார் கைது செய்தனர்.
சதிச்செயல்கள்
கைதான திருவேங்கடம், போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவ்வழக்கில் கைதானவர்களில் அஞ்சலி, சிவா, பிரதீப், அஸ்வத்தாமன், அருள் ஆகியோர், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து, அவர்களின் உறவினர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் குமரேசன் ஆஜராகி கூறியதாவது:
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டு வரப்பட்டு கைமாற்றப்பட்டு உள்ளது.
பல்வேறு சதிச்செயல்கள் நடந்துள்ளன; அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில், 5,000 பக்கங்கள் உடைய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கில், குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டவர்களில் சிலர், ஏற்கனவே தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை, அடுத்தாண்டு ஜனவரிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
விசாரணை
எனவே, இம்மனுக்களையும், அந்த மனுக்களுடன் சேர்த்து தள்ளி வைக்க வேண்டும். அனைத்து மனுக்களுக்கும் பொதுவாக பதிலளிக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'ஒவ்வொரு முறை விசாரணைக்கு வரும் போதும், அரசு தரப்பு இதே காரணத்தை கூறி, மனுக்கள் மீதான விசாரணையை தாமதப்படுத்தி வருகிறது' என்றனர்.
இதையடுத்து, அனைத்து மனுக்கள் மீதும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தாண்டு ஜனவரி முதல் வாரத்துக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.
அத்துடன், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் வெடிகுண்டு எப்படி கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பாக, தனியாக விசாரணை நடத்தவும் காவல்துறையை நீதிபதிகள் அறிவுறுத்தினர்.