ரவுடி நாகேந்திரன் 'நெட்வொர்க்' முறியடிக்க போலீசார் தீவிரம்
ரவுடி நாகேந்திரன் 'நெட்வொர்க்' முறியடிக்க போலீசார் தீவிரம்
ADDED : மே 31, 2025 04:16 AM

சென்னை : ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள போதும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு, 'ஸ்கெட்ச்' போட்டதாகக் கூறப்படும், ரவுடி நாகேந்திரனின், 'நெட் ஒர்க்' முழுவதையும் முறியடிக்க, அவரது சகாக்களை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளதாக, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
இதுகுறித்து, ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் நாகு என்ற நாகேந்திரன், 52. ஆயுள் தண்டனை கைதியாக வேலுார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர், 1990களில், சென்னையில் கோலோச்சிய வெள்ளை ரவியின் கூட்டாளியாக இருந்தார். என்கவுன்டரில் ரவி சுட்டுக்கொல்லப்பட்டபின், நாகேந்திரன் பெரிய ரவுடியாக உருவெடுத்தார்.
கொலை, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என, இவரது அட்டூழியங்கள் எல்லை மீறின. 1997ல், அ.தி.மு.க., நிர்வாகி ஸ்டான்லி சண்முகம் கொலை வழக்கில், இவருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.
கடந்த, 1999ல் இருந்து, சிறையில் உள்ள போதிலும், ரவுடிகளில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து வருகிறார்.
கடந்த ஆண்டு ஜூலை, 5ல், சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டார். இதற்கு சூத்திரதாரி நாகேந்திரன் என்ற தகவல் வெளியானது.
இக்கொலை வழக்கில், நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் உட்பட, 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில், வடசென்னையில் நாகேந்திரன் உறவினர் வீடுகளில் சோதனை நடத்தி, 51 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாகேந்திரனுக்கு மாநிலத்தின் பல பகுதிகளில், 'நெட் ஒர்க்' உள்ளது. ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் டி.எஸ்.பி.,க்கள் தலைமையிலான குழுவினர், நாகேந்திரன் சகாக்கள் குறித்த பட்டியலை தயாரித்து உள்ளனர்.
அவர்கள், திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, கோவை என, பல ஊர்களில் உள்ளனர். அவர்களை எங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

