ரூ.8 கோடி மோசடியில் கைதானவருக்கு புலிகள் ஆதரவாளர்களுடன் தொடர்பு: போலீஸ் விசாரணையில் பகீர்
ரூ.8 கோடி மோசடியில் கைதானவருக்கு புலிகள் ஆதரவாளர்களுடன் தொடர்பு: போலீஸ் விசாரணையில் பகீர்
ADDED : நவ 25, 2024 12:16 AM

சென்னை: ரஷ்ய அரசிடம், 2,000 கோடி ரூபாய்க்கு முதலீடு பெற்று தருவதாகக் கூறி, 8 கோடி ரூபாய் மோசடி செய்த முக்கிய புள்ளிக்கும், புலிகள் அமைப்பை புத்துயிர் பெற வைக்க போதை பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்திய, நடிகையின் முன்னாள் மேலாளருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கம், ஆலிவ் கடற்கரை பகுதியை சேர்ந்தவர் அருண்ராஜ், 38. இவர், தன் கூட்டாளிகள் எட்டு பேருடன் சேர்ந்து, சென்னையை சேர்ந்த தொழில் அதிபரிடம், ரஷ்ய அரசிடம், 2,000 கோடி ரூபாய் முதலீடு பெற்று தருவதாகக் கூறி, 8 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளார். இவர்களை, சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 476 சவரன் நகைகள், 400 கிலோ வெள்ளி பொருட்கள், 14.50 லட்சம் ரூபாய் ரொக்கம், 11 சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், மோசடி மன்னன் அருண்ராஜ், அவரது கூட்டாளிகள் மதன்குமார், ரூபா ஆகியோரை, போலீசார் நான்கு நாட்கள் காவலில் எடுத்து, விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. அதுபற்றி போலீசார் கூறியதாவது:
கடந்த, 2021ல், கேரள மாநிலம் விழிஞ்ஞம் கடற்பகுதியில், விடுதலை புலிகள் அமைப்பை புத்துயிர் பெற வைக்க, பாகிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக, இலங்கைக்கு கடத்த இருந்த, 327 கிலோ ஹெராயின் போதைப்பொருள், ஐந்து, 'ஏகே- 47'ரக துப்பாக்கிகள், ஒன்பது எம்.எம்., ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும், 1,000 தோட்டாக்களை, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, இலங்கையை சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு, போதைப் பொருள் கடத்தல் குறித்து, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.
அப்போது, திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்கியிருந்த, விடுதலை புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் குணசேகரன், சபேசன் உள்ளிட்டோர், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களது பின்னணியில், சென்னை சேலையூரை சேர்ந்த ஆதிலிங்கம்,43, இருப்பதும், அவர் நடிகை வரலட்சுமியிடம், சில மாதம் மேலாளராக பணிபுரிந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ஆதிலிங்கத்தை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.
தற்போது கைதாகியுள்ள அருண்ராஜுக்கும், ஆதிலிங்கம் உள்ளிட்டோருக்கும், நெருங்கிய தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. போதைப் பொருள் மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபட்ட ஆதிலிங்கம், அரசியல் கட்சி ஒன்றை துவக்கினார்.
அதன் வாயிலாக, சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்துள்ளது. மோசடி செய்த பணத்தை, அருண்ராஜ், ஆதிலிங்கம் ஆகியோர் சினிமா படங்களுக்கு பைனான்ஸ் செய்துள்ளனர். இதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.