புகார் அளித்தவரை தாக்கிய போலீசாருக்கு ரூ.5 லட்சம் அபராதம்
புகார் அளித்தவரை தாக்கிய போலீசாருக்கு ரூ.5 லட்சம் அபராதம்
ADDED : நவ 04, 2025 10:39 PM
சென்னை:ரேஷன் கடை முறைகேடு குறித்து புகார் அளித்தவர் மீது, வழக்குப் பதிவு செய்து தாக்கிய, போலீசார் நான்கு பேருக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர், 2022ல், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'ரேஷன் கடையில் நடக்கும் முறைகேடு தொடர்பாக புகார் அளித்தேன். இதனால், ரேஷன் கடை பணியாளர் அளித்த பொய் புகார் அடிப்படையில், மகாலிங்க புரம் போலீசார் என் மீது வழக்கு பதிவு செய்து கடுமையாக தாக்கினர்.
'இதுதொடர்பாக, மாநில மனித உரிமை ஆணையத்துக்கு புகார் மனு அனுப்பினேன். எனக்கு நீதி கிடைக்க, மனித உரிமை ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம், கிருஷ்ணகுமார் புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்படி, விசாரணை நடத்திய ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், நேற்று பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் கிருஷ்ணகுமாரை, மகாலிங்கபுரம் போலீசார் தாக்கி மனித உரிமை மீறலில் ஈடுபட்டது, ஆணையம் நடத்திய விசாரணையில் நிரூபணமாகி உள்ளது.
ரேஷன் கடை ஊழியர் புகார் தெரிவித்ததும், மனுதாரர் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தது சந்தேகத்தை எழுப்புகிறது.
இந்த கைது விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை, போலீசார் பின்பற்றாதது மனித உரிமை மீறல், எனவே, மனுதாரர் கிருஷ்ணகுமாருக்கு, தமிழக அரசு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
இதில், தலா 2 லட்சம் ரூபாயை, அப்போதைய மகாலிங்கபுரம் போலீஸ் சப் - -இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ஏட்டு ஜெகதீஷ்பிரபு ஆகியோரிடம் இருந்தும், தலா, 50,000 ரூபாயை, காவலர்கள் ஆனந்தன், செல்வகணேஷ் ஆகியோரிடம் இருந்தும் வசூலித்து கொள்ளலாம். இவர்கள் நான்கு பேர் மீதும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

