அலைக்கழிக்கும் போலீஸ் அதிகாரிகள்: ஊர் காவல் படையினர் கொந்தளிப்பு
அலைக்கழிக்கும் போலீஸ் அதிகாரிகள்: ஊர் காவல் படையினர் கொந்தளிப்பு
ADDED : செப் 24, 2025 05:02 AM

சென்னை; 'போலீஸ் அதிகாரிகள், பணிக்கு அழைத்து, நீண்ட நேர காத்திருப்புக்கு பின், பணி இல்லை எனக் கூறி அனுப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்' என, ஊர் காவல் படையினர் புலம்புகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
ஊர் காவல் படையில் தமிழகம் முழுதும், 16,633 பேர் உள்ளோம். அசாதாரண சூழ்நிலை, இயற்கை பேரிடர், வி.வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்பு, கோவில் திருவிழா, போக்குவரத்தை சீர் செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறோம்.
மாதத்திற்கு ஐந்து நாட்கள் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்கு நாள் ஒன்றுக்கு, 560 ரூபாய் தரப்படுகிறது.
எங்களுக்கு மாதம் தோறும் பணி கிடையாது என்பதால், தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்கிறோம்.
போலீஸ் அதிகாரிகள் அழைத்தால், அன்றைய தினம் விடுமுறை எடுத்து, போலீசார் சொல்லும் இடத்திற்கு செல்வோம்.
நேற்று முன் தினம், போலீஸ் இணை கமிஷனர் உத்தரவின்பேரில், 200 பேர் அழைக்கப்பட்டோம். பாதுகாப்பு பணி செய்ய வேண்டிய இடத்திற்கு சென்றதும், துணை கமிஷனர், 'அவர்களுக்கு இங்கு பணி இல்லை. அவர்களை வேறு இடத்திற்கு அனுப்புங்கள்' என, கூறிவிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, எங்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட அனுமதி அளித்தனர்.
இச்சம்பவம் எங்களுக்கு புதிது அல்ல. போலீஸ் அதிகாரிகள் சுற்றறிக்கை வாயிலாக, எங்களை பணிக்கு அழைப்பர். இணை கமிஷனர் அலுவலகத்திற்கு சென்ற பின், துணை கமிஷனர் அலுவலகத்திற்கு செல்லுங்கள் என்பர்.
அங்கு சென்றதும், உதவி கமிஷனர் அலுவலகத்திற்கு செல்லுங்கள் எனக் கூறுவர். அங்கு சென்றால், போலீஸ் நிலையம் செல்லுங்கள் என்பர்.
இணை கமிஷனர் அலுவலகத்திற்கு, காலை, 7:00 மணிக்கு சென்று விடுவோம். போலீஸ் நிலையம் செல்வதற்கு, 10:30 மணியாகி விடும். இன்ஸ்பெக்டர்கள், நாங்கள் போலீஸ் நிலையம் சென்ற நேரத்தில் இருந்து, எட்டு மணி நேர வேலை என, கணக்கில் எடுத்துக் கொள்வர். ஆட்கள் தேவைக்கு ஏற்ப, ஊர் காவல் படையினருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை தெரிவியுங்கள் என, பல முறை கேட்டுவிட்டோம்.
ஆனால், போலீஸ் அதிகாரிகள், இப்படி அலைக்கழிப்பு செய்வது தொடர்கிறது. அவர்களின் அழைப்பின்படி சென்ற பின், உங்களுக்கு பணி இல்லை என, துரத்துவதும் நீடிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.