போலீஸ் வசம் உள்ள மொபைல் போன் கோர்ட்டை அணுக வக்கீலுக்கு உத்தரவு
போலீஸ் வசம் உள்ள மொபைல் போன் கோர்ட்டை அணுக வக்கீலுக்கு உத்தரவு
ADDED : ஆக 14, 2011 02:19 AM
சென்னை : ஆபாச எஸ்.எம்.எஸ்., வந்ததால், விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்ட மொபைல் போனை திரும்பப் பெற, எழும்பூர் கோர்ட்டை வழக்கறிஞர் அணுகுமாறு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஐகோர்ட்டில் வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ் தாக்கல் செய்த மனுவில், 'என் மொபைலுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்., வந்தது. இது தொடர்பாக அளித்த புகார் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்காததால், எழும்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் புகார் தாக்கல் செய்தேன். மொபைல் போனுடன் வருமாறு, சைபர் கிரைம் போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.
மொபைல் போனை, ஜனவரி மாதம் ஒப்படைத்தேன். மேல்விசாரணைக்காக தடய அறிவியல் துறைக்கு அனுப்பப்பட்டதாக அறிகிறேன். வழக்கறிஞர் என்பதால், என் கட்சிக்காரர்களின் எண்கள் அதில் உள்ளன. விசாரணைக்கு தேவைப்படும் போது, மொபைல் போனை ஒப்படைக்க தயாராக உள்ளேன். எனவே, என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்' என கூறியுள்ளார். மனுவை நீதிபதி சுதந்திரம் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ரகுபதி ஆஜரானார். போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர் முகமது ரியாஸ், 'விசாரணைக்காக அந்த மொபைல் போன் தேவைப்படுகிறது. எழும்பூர் கோர்ட்டில் மூன்று வாரங்களில் அதை ஒப்படைக்கலாம்' என்றார். இதையடுத்து, நீதிபதி சுதந்திரம் பிறப்பித்த உத்தரவில், 'போலீஸ் தரப்பில் மொபைல் போனை ஒப்படைத்த பின், அதைப் பெறுவதற்காக எழும்பூர் கோர்ட்டை மனுதாரர் அணுகலாம்' என கூறியுள்ளார்.