'முத்தலாக்' அனுப்பிய கணவர், மாமனாருக்கு போலீஸ் 'காப்பு'
'முத்தலாக்' அனுப்பிய கணவர், மாமனாருக்கு போலீஸ் 'காப்பு'
ADDED : ஜன 15, 2024 09:20 AM

காஞ்சிபுரம் மாவட்டம், பெரிய காஞ்சிபுரத்தை சேர்ந்த இஸ்மாயின் ஷரீப் மகன் நாசர் ஷரீப், 35. இவர், திருவண்ணாமலை மாவட்டம், அப்பந்தாங்கலை சேர்ந்த மஸ்தான் ஷரீப் மகள் ஆயிஷா பிர்தோஸ், 33, என்பவரை, 2018ல் திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். திருமணம் நடந்த சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆயிஷா கடந்தாண்டு கணவரை பிரிந்து, ஜெர்மன் நாட்டுக்கு பணிக்கு சென்றார். பெங்களூருவில் நாசர் ஷரீப் பணிபுரிந்தார்.
சில நாட்களுக்கு முன், இஸ்லாமிய முறைப்படி திருமண முறிவான, 'முத்தலாக்' செய்வதாக தெரிவித்து, ஆயிஷாவுக்கு பதிவு தபால் அனுப்பினார். அதை பெற்ற அந்த பெண் அதிர்ச்சியடைந்தார். ஊர் திரும்பிய ஆயிஷா, ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
விசாரித்த போலீசார், முறைப்படி விவாகரத்து பெறாமல், இரண்டாவது திருமணத்துக்கு ஏற்பாடு செய்வது தெரிந்து, தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
---
கொள்ளையர்கள் தாக்கியதில் எஸ்.ஐ., ஏட்டு படுகாயம்
திருநெல்வேலி ஜங்ஷன் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு, உதவி கமிஷனர் ராஜேஸ்வரன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அவரது வாகனத்தை ஏட்டு சரவண பிரகாஷ் ஓட்டினார். பயிற்சி எஸ்.ஐ., நாராயணன் உடன் சென்றார்.
பாலபாக்யா நகரில் மூன்று பேர் கும்பல், ஒரு கடையில் ஷட்டரை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்தனர். இதைப்பார்த்த போலீசார் அவர்களை துரத்திய போது, அந்த கும்பலில் ஒருவர், கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் சரவணபிரகாஷ் தலையில் தாக்கி டூ - வீலரில் தப்பினார். மற்றொருவர், அரிவாளால் வெட்டியதில் ஏட்டுக்கு தலையில் ரத்தம் கொட்டியது.
பயிற்சி எஸ்.ஐ., நாராயணன் அவர்களை துரத்தினார். அவர் மீது அந்த கும்பல் சரமாரியாக கற்களை வீசி தப்பியது. இதில், அவருக்கும் நெஞ்சில் காயம் ஏற்பட்டது. இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உதவி கமிஷனர் தகவலின் படி, போலீசார் அந்த கும்பலை தேடும் முயற்சி ஈடுபட்டனர். இதே கும்பல் நேற்று முன்தினம் திருநெல்வேலி மாவட்டம், பணகுடியிலும் இதே போல ஒரு கடையில் ஷட்டரை உடைக்க முயற்சித்தபோது, தடுத்த போலீஸ்காரரை இரும்பு கம்பியால் தாக்கி தப்பியது குறிப்பிடத்தக்கது.
---
ஏ.டி.எம்.,மை உடைத்து திருட முயற்சி
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பசுவந்தனை சாலையில் எச்.டி.எப்.சி., வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று அதிகாலை 4:33 மணிக்கு மர்ம நபர் ஏடிஎம் இயந்திரத்தின் அடிப்பகுதியை கழட்டி பணம் எடுக்க முயற்சித்துள்ளார். அலாரம் ஒலித்ததால் தப்பி ஓடினார். காலையில் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சி.சி.டி.வி., காட்சிகள் மூலம் விசாரிக்கின்றனர்.
---
போதையில் கார் ஓட்டி விபத்து; பெண், குழந்தை பரிதாப பலி
திருப்பூர், முருகம்பாளையத்தை சேர்ந்தவர் முகுந்தன், 30; பனியன் தொழிலாளி. இவரது மனைவி சத்யா, 20. தம்பதிக்கு, பிருத்விக் என்ற ஒன்றரை வயது மகன் இருந்தார். பொங்கல் பண்டிகையொட்டி மூவரும் நேற்று மதியம் திருப்பூரில் இருந்து டூ - வீலரில் சொந்த ஊரான சேலம், மேட்டூருக்கு புறப்பட்டனர்.
ஊத்துக்குளி, புலவர்பாளையம் அருகே சென்ற போது, விஜயமங்கலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த கார், டூ- வீலர் மீது மோதி, அங்கிருந்த நுால் மில்லுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த பீஹார் மாநிலத்தை சேர்ந்த, 3 வயது குழந்தை பியூட்டி குமாரி மீதும் மோதியது. இதில், குழந்தை பியூட்டி குமாரி, சத்யா சம்பவ இடத்திலேயே இறந்தனர். முகுந்தன், பிருத்விக் படுகாயடைந்தனர். போதையில் காரை இயக்கிய விக்னேஷ், 30, போலீசில் சிக்கினார்.
---
மோதலில் தொழிலாளி கொலை
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த குமாரமங்கலத்தை சேர்ந்தவர் சுரேஷ், 43; தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஞானசேகரன், 38, அன்பரசன், 35. இவர்களிடையே நேற்று காலை மோதல் ஏற்பட்டது. படுகாயமடைந்த சுரேஷ், வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். ஆத்திரமடைந்த சுரேஷின் உறவினர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், உமராபாத் - வாணியம்பாடி சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.
---
கல்லால் அடித்து கொலை: 3 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஊர்க்காடு கோட்டியப்பர் கோயில் தெருவை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி என்ற கண்ணன் 55, சாட்டுபத்துவை சேர்ந்த மாடக்கண்ணு 44, இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. இதில் மாடக்கண்ணு, நண்பர்கள் கல்லிடைக்குறிச்சி முத்துப்பாண்டியன் 30, அருள் 27, சேர்ந்து கண்ணனை கல்லால் அடித்து தாக்கினர். இதில் அவர் இறந்தார். அம்பாசமுத்திரம் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
---
ஈ.டி., அதிகாரிகள் மீது தாக்குதல்: மேலும் இருவர் கைது
மேற்கு வங்கத்தில், ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில், மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நசாத் மற்றும் மினாகா ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுவரை மொத்தம் நான்கு பேர், இவ்வழக்கில் கைதாகி உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.