ADDED : மே 04, 2025 03:48 AM

கள்ளக்குறிச்சி: ''மதுரை ஆதீனம் கார் விபத்து தொடர்பாக, பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்பவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர்.
சென்னை அருகே காட்டாங்கொளத்துாரில், அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் பங்கேற்க, நேற்று முன்தினம் காலை, மதுரை ஆதீனம் காரில் சென்றார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அஜீஸ் நகர் சர்வீஸ் சாலையில், ரவுண்டானாவை கடந்த அவரது கார் மீது மற்றொரு கார் மோதியது.
இந்த விபத்தில், மதுரை ஆதீனம் எவ்வித காயமும் இன்றி தப்பினார்.
இது தொடர்பாக பேட்டி அளித்த மதுரை ஆதீனம், 'கார் விபத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது; என்னை கொல்ல நடந்த சதி' என குறிப்பிட்டார். 'நடந்த விபத்து தொடர்பாக, போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டும்' எனவும் சொல்லி இருந்தார்.
பொதுமக்கள் தகவல்
இது தொடர்பாக, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் அளித்த விளக்கம்:
மதுரை ஆதீனம், சென்னைக்கு 'பார்ச்சூனர்' காரில் சென்று கொண்டிருந்தபோது, உளுந்துார்பேட்டை- சேலம் ரவுண்டானா அருகே அவரது கார் மீது மற்றொரு கார் மோதியது.
இந்த சம்பவம் தொடர்பாக, பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார், சம்பவ இடத்திற்கு செல்வதற்குள், இரு தரப்பினரும் அங்கிருந்து சென்று விட்டனர். பின், சம்பவ இடத்திலிருந்த 'சிசிடிவி' பதிவுகளை போலீஸ் தரப்பில் ஆய்வு செய்யப்பட்டது.
அதில், மதுரை ஆதீனம் சென்ற வாகனம், அஜிஸ் நகர் மேம்பாலத்தில் செல்லவில்லை. அதற்கு பதிலாக, அஜிஸ் நகர் பிரிவு சாலை வழியாக உளுந்துார்பேட்டை மார்க்கத்தில் அதிவேகமாக சென்றது. அப்போது காலை 9:45 மணிக்கு, சேலம் - சென்னை நோக்கி சென்ற 'மாருதி' கார், ரவுண்டானா அருகே மெதுவாக கடந்தது.
அப்போது, மதுரை ஆதீனம் காரின் பக்கவாட்டில் உரசியது. இதில் மாருதி காரின் முன் பகுதியிலும், பார்ச்சூனர் வாகனத்தின் பின் பக்கத்திலும் லேசான சேதம் ஏற்பட்டது.
புகார் கொடுக்கவில்லை
இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின், சமாதானமாகி சென்று விட்டனர்.
இந்நிலையில், மதுரை ஆதீனம் தன்னை கொல்ல சதி என பேட்டி அளித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் கொலை முயற்சிக்கான சதி எதுவும் இல்லை என தெரிய வருகிறது.
இந்த விபத்து, ஆதீனம் பயணம் செய்த கார் டிரைவரின் கவனக்குறைவாலேயே ஏற்பட்டுள்ளது. 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்ததில், மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனம் தான் அதிவேகமாக சென்று விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக, இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை. இதை மீறி, யாரும் இந்த விஷயத்தை பெரிதுபடுத்துவது போல சமூக வலைதளங்களில் தகவல் பகிர்ந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த விளக்கத்தில் கூறப்படுள்ளது.

