புகார் மீது நடவடிக்கை எடுக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் போலீஸ் எஸ்.ஐ.,
புகார் மீது நடவடிக்கை எடுக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்; கையும், களவுமாக சிக்கினார் போலீஸ் எஸ்.ஐ.,
UPDATED : ஜன 30, 2025 08:44 PM
ADDED : ஜன 30, 2025 08:42 PM

மதுரை: மதுரை புதூரில், புகாரின் மீது நடவடிக்கை எடுக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் எஸ்.ஐ., சண்முகநாதன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக சண்முகநாதன் பணிபுரிந்து வருகிறார். ஹச்.எம்.எஸ்., காலனியை சேர்ந்த கவிதா குற்ற வழக்கில் நடவடிக்கை எடுக்கும்படி சண்முகநாதன் இடம் கூறியுள்ளார். கடந்த காலத்தில் ஜெயந்திபுரம் பகுதியில் கவிதா வசித்தபோது, முன்விரோதம் காரணமாக தாக்குதலுக்கு ஆளாகப் பட்டார். இது தொடர்பாக நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற இருவர் கைது செய்யப்பட ரூ.1 லட்சம் சண்முகநாதன் லஞ்சம் கேட்டுள்ளார். இதற்கு கவிதா தயக்கம் தெரிவித்ததால் ரூ. 70,000 தருமாறு சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.
இதனை கொடுக்க கவிதாவுக்கு விருப்பமில்லை. அவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தலின்படி, முதற்கட்டமாக ரூ. 30,000 லஞ்சம் கொடுக்க சண்முகநாதனிடம் முன்வந்துள்ளார்.
புதூர் பஸ் நிலையம் அருகே, சண்முகநாதனுக்கு கவிதா ரூ. 30,000 லஞ்சமாக கொடுத்தார். இந்த பணத்தை சண்முகநாதன் பைக் பெட்ரோல் டேங்கில் உள்ள கவரில், வைத்து கொண்டிருக்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கையும், களவுமாக சிக்கினார். இதையடுத்து, அவரை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சத்யசீலன் தலைமையிலான போலீசார், கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

