காவல் நிலைய 'சிசிடிவி'க்கள் எஸ்.ஐ.க்களிடம் பொறுப்பு
காவல் நிலைய 'சிசிடிவி'க்கள் எஸ்.ஐ.க்களிடம் பொறுப்பு
ADDED : ஜன 25, 2024 01:01 AM
சென்னை:காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள, 'சிசிடிவி'க்களை கண்காணிக்கும் பொறுப்பு, சிறப்பு எஸ்.ஐ.,க்களிடம் ஒப்படைக்கப்பட்டுஉள்ளது.
தமிழகத்தில் உள்ள, 1,567 காவல் நிலையங்கள் மற்றும் காவல்துறை சார்ந்த அலுவலகங்களில், வரவேற்பறை, நுழைவு வாயில், லாக்கப் அறை உள்ள பகுதிகள் என, தலா மூன்று 'சிசிடிவி' எனப்படும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவற்றில் பதிவாகும் காட்சிகள் அழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், காவல் நிலைய, 'சிசிடிவி' பதிவுகளை, மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஆவணப்படுத்தி சேமித்து வைக்க வேண்டும். அந்த பதிவுகளை, ஐந்து ஆண்டுகளாவது பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
வழக்குகளுக்கு மட்டுமல்ல, குற்றங்களை குறைக்கவும், தடுக்கவும், 'சிசிடிவி' பதிவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த, அங்கு, 'சிசிடிவி'யில் பதிவாகும் காட்சிகளை ஆய்வு செய்யும் பொறுப்பு, அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதுபற்றி அவர்கள் வாரந்தோறும், டி.ஜி.பி., அலுவலகத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும். அத்துடன், 'சிசிடிவி'க்களை கண்காணிக்கும் பொறுப்பு சிறப்பு எஸ்.ஐ.,களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
'சிசிடிவி' பழுது அல்லது அதை திருப்பி வைப்பது உள்ளிட்ட குற்றங்கள் நடந்தால் அதுபற்றி அவர், டி.ஜி.பி., அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.