போலி இ - மெயில் அனுப்பி ரூபாய் 2 கோடி மோசடி: வியாபாரிகளுக்கு போலீசார் எச்சரிக்கை
போலி இ - மெயில் அனுப்பி ரூபாய் 2 கோடி மோசடி: வியாபாரிகளுக்கு போலீசார் எச்சரிக்கை
ADDED : அக் 06, 2024 01:21 AM

சென்னை: போலி மின்னஞ்சல் அனுப்பி, சென்னையை சேர்ந்த நிறுவனத்திடம், 2 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதால், எச்சரிக்கையுடன் இருக்கும்படி வியாபாரிகளுக்கு சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, தமிழக சைபர் கிரைம் போலீசார் அறிவிப்பு:
சைபர் குற்றவாளிகள், வணிக நிறுவனங்களின் வியாபாரம் தொடர்பான பணப்பரிமாற்ற மின்னஞ்சல் தகவல் தொடர்புகளை கண்காணித்து, அவற்றை இடைமறித்து, அத்தகவல்கள் வாயிலாக, மோசடியாக பணம் பறித்து வருகின்றனர்.
அதன்படி, சென்னையில் உள்ள, 'அக்ரிகோ டிரேடிங்' நிறுவன மேலாளருக்கு, அவர்கள் வணிகம் செய்து வரும் நபரின் மின்னஞ்சல் போல, போலியான மின்னஞ்சலில் இருந்து, தகவல் வந்துள்ளது. அதில், நிறுவனம் கோரிய அடக்கவிலை பட்டியலுடன், செலுத்த வேண்டிய பணம், 2 கோடி ரூபாயை, அமெரிக்காவில் உள்ள ஒரு வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்னஞ்சல், முன்னதாக பெறப்பட்ட மின்னஞ்சலுடன் தொடர்புடையதாக இருந்ததால், நிறுவன மேலாளர் உடனடியாக, மோசடி கும்பல் அனுப்பிய வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியுள்ளார். பின், பணம் வந்து விட்டதா என, பொருள் அனுப்பும் நிறுவனத்திடம் கேட்ட போது தான், அந்த மின்னஞ்சல் மோசடி என்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக பெறப்பட்ட புகாரை தொடர்ந்து, பணம் அனுப்பப்பட்ட அமெரிக்கா வங்கியில், அப்பணத்தை மோசடி கும்பல் எடுக்காதபடி நிறுத்தி வைக்கப்பட்டது.
விரைவில், அப்பணம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கப்படும். இந்த வழக்கு, வழக்கமான மின்னஞ்சலின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது.
அதிகப்படியாக பண பரிவர்த்தனைகள் சம்பந்தப்பட்டிருக்கும் போது, கவனக்குறைவாக இருந்தால், வணிகர்களுக்கு அதிக நிதி இழப்புகளை ஏற்படுத்தும்.
எனவே, பண பரிவர்த்தனைக்கு முன், மின்னஞ்சல் உட்பட அனைத்து தகவல்களையும் உறுதி செய்ய வேண்டும். சைபர் கிரைம் தொடர்பான புகார்களை, 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.