முன்விரோதத்தால் 4,460 பேருக்கு ஆபத்து: போலீசார் எச்சரிக்கை
முன்விரோதத்தால் 4,460 பேருக்கு ஆபத்து: போலீசார் எச்சரிக்கை
ADDED : ஜூலை 22, 2025 03:09 AM

சென்னை: முன்விரோதம் உள்ளிட்ட காரணங்களால், 4,460 பேரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக, ஓ.சி.ஐ.யு., எனப்படும் ஒருங் கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.
கடந்த, 2010ம் ஆண்டில், தமிழக காவல் துறையில், ஓ.சி.ஐ.யு., எனப்படும் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு துவக்கப்பட்டது. எஸ்.பி., தலைமையில் செயல்படும் இப்பிரிவில், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் என, 450க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வருகின்றனர்.
இப்பிரிவு போலீசார், ரவுடிகளின் அட்டூழியம், ஆயுதங்கள் மற்றும் ஆள் கடத்தல், வெடிமருந்து, கஞ்சா கடத்தல், ஹவாலா பண பரிமாற்றம், கள்ள நோட்டு புழக்கம், பயங்கரவாத செயலில் ஈடுபடுவோர் குறித்து, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த போலீசார் தான், தமிழகத்தில் ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்படுவதை கண்டறிந்தனர்.
முன்விரோதம் காரணமாக பழிக்கு பழிவாங்க துடிக்கும் ரவுடிகள், கூலிப்படையினர், அவர்களின் பகைமை குழுக்கள் குறித்தும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து, ஓ.சி.ஐ.யு., பிரிவு போலீசார் கூறியதாவது:
காவல் துறையின் பட்டியலில், குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப, ஏ பிளஸ், ஏ,பி.சி., என, ரவுடிகளை வகைப்படுத்தி உள்ளோம். மேலும், சிறையில் உள்ள ரவுடிகள்; ஜாமினில் வெளியே வந்த ரவுடிகள் குறித்து தினமும் கண்காணித்து வருகிறோம். இவர்களை கண்காணிக்க, 'பருந்து' என்ற செயலியும் பயன்படுத்தி வருகிறோம்.
அந்த வகையில், ரவுடிகள், கூலிப்படையினரால் முன்விரோதம் உள்ளிட்ட காரணங்களால், நான்கு ஆண்டுகளில், 4,460 பேரின் உயிருக்கு ஆபத்து இருப்பது குறித்து, அவர்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளோம். கொலை செய்ய இருந்த, 326 பேரை காப்பாற்றி, குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று துப்பாக்கிகள் உட்பட, 34 கள்ள துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.