வரதட்சணை வழக்கில் போலீஸ்காரரின் பெற்றோருக்கு முன்ஜாமின்
வரதட்சணை வழக்கில் போலீஸ்காரரின் பெற்றோருக்கு முன்ஜாமின்
ADDED : ஜூலை 24, 2025 05:38 AM
மதுரை : வரதட்சணைகேட்டு கொடுமைப்படுத்தியதாக பதிவான வழக்கில் மதுரை போலீஸ்காரர் பூபாலனின் தந்தையான இன்ஸ்பெக்டர் மற்றும் தாய்க்கு மதுரை நீதிமன்றம் முன்ஜாமின் அனுமதித்ததது.
மதுரை காதக்கிணறை சேர்ந்தவர் பூபாலன் 35. மதுரை அப்பன் திருப்பதி ஸ்டேஷன் போலீஸ்காரர். இவரது மனைவி தங்கபிரியா. அவரை வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தினர் துன்புறுத்தியதாக ஆடியோ வெளியானது.
மதுரை எஸ்.பி.,யிடம் தங்கபிரியா புகார் அளித்தார். பூபாலன், அவரது தந்தை செந்தில்குமார் (சாத்துார் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்), தாய் விஜயா உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி, பெண் வன்கொடுமை பிரிவுகளில் அப்பன் திருப்பதி போலீசார் வழக்கு பதிந்தனர். பூபாலன் கைது செய்யப்பட்டார்.செந்தில் குமார், அவரது மனைவி விஜயா முன்ஜாமின் கோரி மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி சிவகடாட்சம் விசாரித்தார்.
மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் மோகன்குமார், முத்துக்குமார்ஆஜராகி,'செந்தில்குமார் 35 ஆண்டுகளாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாமல் பணிபுரிகிறார். கோவில்பட்டியில் வசிக்கிறார். பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார்தாரரிடம் வரதட்சணை கேட்கவில்லை. முன் ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என்றனர். நீதிபதி முன்ஜாமின் அனுமதித்தார்.