ADDED : நவ 05, 2025 01:46 AM
சென்னை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: வன்முறையின் வாழ்விடம், தமிழகம் என்று சொல்லும் அளவுக்கு, கடந்த நான்கரை ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில், கொலை, கொள்ளை, கடத்தல், பதுக்கல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், போதைப் பொருட்கள் நடமாட்டம், பாலியல் துன்புறுத்தல்கள், அன்றாடம் நடந்து வருகின்றன.
கோவையில் கல்லுாரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் நடமாடவே முடியாத அளவுக்கு, சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதற்கு, இதைவிட சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை. தமிழகத்தில் காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில், முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும்.
பா.ம.க., தலைவர் அன்பு மணி: கோவையில் கல்லுாரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு, 36 மணி நேரம் கழித்து, முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். மாணவிக்கு நடந்த கொடுமைக்கு, தமது ஆட்சியின் தோல்வி தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமல்,குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருமாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 'வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலை' என, அடுக்கு மொழியில் பேசி, தன் மீது படிந்திருக்கும் கறைகளை, முதல்வர் ஸ்டாலின் துடைத்தெறிய முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

