'பூத்' வாரியாக 'வாட்ஸாப்' குழு: திணறும் அரசியல் கட்சியினர்
'பூத்' வாரியாக 'வாட்ஸாப்' குழு: திணறும் அரசியல் கட்சியினர்
ADDED : அக் 24, 2025 02:00 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, தமிழக அரசியல் கட்சிகள், ஓட்டுச்சாவடிகள் தோறும், கட்சி நிர்வாகிகள் 10 பேர் அடங்கிய குழுக்களை உருவாக்கி உள்ளன. தி.மு.க., - அ.தி.மு.க., -பா.ஜ.,மட்டுமின்றி, புதிய வரவான த.வெ.க.,விலும், பூத் கமிட்டி அமைத்து, ஆலோசனை கூட்டங்களை நடத்தி உள்ளனர்.
மேலும், இளம் தலைமுறை ஓட்டுகளை பெற, தகவல் தொழில்நுட்ப பிரிவு வாயிலாக, சமூக வலைத்தளங்களிலும் தீவிரமாக பதிவுகளை போட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். வீடியோக்கள், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என கட்சியினர் மத்தியில் மட்டுமே பரப்பும் இந்த செயல்பாடுகளை, மக்களுக்கும் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.
அதற்காக, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், குறைந்தபட்சம் 200 வாக்காளர்கள் கொண்ட 'வாட்ஸாப் குழுக்கள்' அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், கட்சி நிர்வாகிகளின் உறவினர்கள் மட்டுமே, மொபைல் எண்களை தருகின்றனர்.
அரசியல் விருப்பமில்லாத மக்கள், தர மறுப்பதால், மொபைல் எண்களை வாங்குவதில், கட்சி நிர்வாகிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். இதனால், ஓட்டுச்சாவடி வாரியாக, 'வாட்ஸாப்' குழுக்களை உருவாக்குவதில், களத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் திணறி வருகின்றனர்.

