ADDED : ஜூலை 05, 2025 08:23 AM

சென்னை: 'வரதட்சணை கொடுமையால் இறந்த ரிதன்யாவின் மரணம் தற்கொலை அல்ல; திட்டமிடப்பட்ட படுகொலை' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிப்புதுாரைச் சேர்ந்த ரிதன்யா, 27, வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். இறக்கும் முன் அவர் பேசிய வீடியோ, இதயத்தை நொறுங்க செய்கிறது.
அவரது தற்கொலைக்கு காரணமான கணவர் கவின்குமார் மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது, முறையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை. அரசியல் அழுத்தம் காரணமாக, மூவரும், எளிதில் ஜாமினில் வரக்கூடிய வழக்கு பதிவு செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது.
இது வெறும் தற்கொலை அல்ல; இனி வாழவே முடியாத நிலைக்கு அவரை தள்ளி, தற்கொலை செய்ய வைத்த திட்டமிட்ட படுகொலை. இந்த நுாற்றாண்டிலும், வரதட்சணை கொடுமையால் பெண்கள் உயிரிழப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒட்டுமொத்த சமூகமும் தலைகுனிய வேண்டும்.
ரிதன்யா மரணத்துக்கு காரணமான மூவர் மீதும், கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் ஆட்படாமல், கடுந்தண்டனை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.