இது உங்கள் இடம்: அரசியல்வாதிகளே.. எங்கள் ஓட்டுகள் தேவையில்லையா?
இது உங்கள் இடம்: அரசியல்வாதிகளே.. எங்கள் ஓட்டுகள் தேவையில்லையா?
ADDED : மார் 06, 2024 03:32 AM

ஆர்.பிரேம் சுதாகர், பெரிய குளம், தேனி மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்:
வருமான வரி கட்டும் அளவுக்கு சம்பாதிப்பவர்களும், அவர்களது ஓட்டுகளை குறி வைக்கும் அரசியல்வாதிகளும், வருமான வரி சலுகையை ஒவ்வொரு பட்ஜெட்டிலும் எதிர் பார்க்கின்றனர்.
ஆனால், வருமான வரி கட்டும் அளவுக்கு கூட மாத சம்பளம் பெற இயலாத, தனியார் துறையில் உழைத்து வாழ்க்கையை தொலைத்த கோடிக்கணக்கான தொழிலாளர்கள்,பணியாளர்கள் நிலை பற்றி பேச, எந்த அரசியல்வாதியும் முன்வருவதில்லை. இவர்கள் ஓட்டு, அவர்களுக்கு தேவையில்லையா?
பல தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளமும், நல்ல போனசும் இல்லாமல் உழைத்து விட்டு, இறுதிக்காலத்தில் பென்ஷன் கிடைக்காமல், நாடு முழுக்க பல கோடி பேர் வறுமையில் வாடுவது, நம் அரசியல்வாதிகளுக்கு தெரியுமா?
தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி கழகத்தில், தொழிலாளி சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும், 12 சதவீதம் மற்றும் வேலை அளிக்கும் நிறுவனம் செலுத்தும் 12 சதவீதத்தில், 8.33 சதவீதம் பென்ஷனுக்காக ஒதுக்கப்படும்.
இவ்வாறாக பிடித்தம்செய்யப்பட்ட பி.எப்., தொகையில் இருந்தே, 58 வயதை நிறைவு செய்த தொழிலாளிக்கு பென்ஷன் வழங்கப்படுகிறது.
இன்றும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில்இருந்து, 1,000 ரூபாய்க்கு குறைவாக பென்ஷன் பெறுபவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். அதிகபட்சமாக 4,000 ரூபாய் தான் பென்ஷனாகவழங்கப்படுகிறது.
இப்படி, 1,000 ரூபாய் பென்ஷன் வாங்குபவர்களுக்கு, 3,000 ரூபாய் வழங்கவும் மற்றவர்களுக்கு, 9,000 ரூபாய் வழங்கவும் வருங்கால வைப்பு நிதி ஆர்கனைசேஷன் டிரஸ்ட் பரிந்துரை வழங்கியும், இன்று வரை அமல்படுத்தப்படவில்லை.
அதிக சம்பளம் பெறும் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு வருமான வரி சலுகை, பழைய பென்ஷன் முறையை அமல்படுத்த குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளே... எங்களை போன்றவர்களின் நிலையையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

