வெறுப்பு அரசியலை விட அன்பை விதைக்கும் அரசியல் வலுவானது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
வெறுப்பு அரசியலை விட அன்பை விதைக்கும் அரசியல் வலுவானது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
ADDED : ஏப் 15, 2025 01:56 AM

சென்னை: “வெறுப்பு அரசியலை விட, அன்பை விதைக்கும் அரசியல் தான் வலுவானது; ஆற்றல் வாய்ந்தது,” என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அம்பேத்கரின் 135வது பிறந்த நாளையொட்டி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவரது உருவ சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
'சமத்துவ நாள்'
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், சைதாப்பேட்டையில், 44.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, எம்.சி.ராஜா மாணவர் விடுதியையும் திறந்து வைத்தார்.
அங்கு மாணவர்களிடம் அவர் உரையாடும்போது, “விடுதியில் மாணவர்கள் மட்டுமே தங்க வேண்டும். வெளிநபர்களை அழைத்து வந்து தங்க வைக்காதீர்,” என, அறிவுரை வழங்கினார்.
அதன்பின், சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த, 'சமத்துவ நாள்' நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு, ஆதிதி-ராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 227.85 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, 18 விடுதி கட்டடங்கள்; உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்ட 46 பள்ளிகள்; 19 சமுதாய நலக்கூடங்கள்; 22 கல்லுாரி விடுதிகளில் கற்றல் கற்பித்தல் மையம்.
பழங்குடியின மக்களுக்கான தொலை மருத்துவம்; இ - சேவை மையம் ஆகிய வற்றை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, முதல்வர் திறந்து வைத்தார்.
பழங்குடியினருக்கு 1,000 வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 1,000 பேருக்கு வீட்டு சாவியை வழங்கினார்.
நலத்திட்டங்கள்
பின், 49,542 பயனாளிகளுக்கு 332.60 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அம்பேத்கர் எழுதி, தமிழாக்கம் செய்யப்பட்ட, 'சாதியை அழித்து ஒழித்தல், ஹிந்து மதத்தின் புதிர்கள்' என்ற புத்தகங்களை, முதல்வர் வெளியிட்டார்.
அதை முன்னாள் எம்.பி.,யும், அம்பேத்கரின் பேரனுமான பிரகாஷ் அம்பேத்கர் பெற்றுக் கொண்டார். வன உரிமை சட்டத்திற்கான வரைபடத்தை, முதல்வர் வெளியிட, அமைச்சர் மதிவேந்தன், பழங்குடியின சமூகத்தை சேர்ந்த நித்யா, சீனிவாசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் முதல்வர் பேசியதாவது:
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், சைதாப்பேட்டையில் திறக்கப்பட்டுள்ள, எம்.சி.ராஜா மாணவர் விடுதியில், அவரது மார்பளவு சிலை அமைக்கப்படும்.
தி.மு.க., ஆட்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயனடைய, எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதனால், உயர் கல்வி படிக்கும் எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மாணவர்களின் முன்னேற்றம் கண்கள் என்றால், பெண்களின் முன்னேற்றம் இதயத் துடிப்பு போன்றது.
எனவே, ஆதிதிராவிட மகளிரை, நில உடைமையாளர்களாக மாற்ற, 'நன்னிலம்' திட்டம் வாயிலாக, கடந்த இரண்டு ஆண்டுகளில், 624 பேருக்கு 30 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
சுயமரியாதை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றத்திற்கு, தி.மு.க., அரசு எப்போதும் துணை நிற்கும். ஜாதியின் பெயரால் தொடக்கூடாது, தெருவில் நடக்கக் கூடாது, கோவிலுக்குள் நுழையக்கூடாது என்பதை எல்லாம், நம் இடைவிடாத பரப்புரைகளால் உடைத்து நொறுக்கி விட்டோம்.
ஜாதியே தமிழனத்தை பிளவுப்படுத்தும் முதல் தீயசக்தி. கல்வி, வேலை, பதவி உள்ளிட்டவையே, ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் கையில் அதிகாரம் செலுத்தும் வாய்ப்பை தருகிறது.
இதுவே, தி.மு.க., அரசு ஏற்படுத்திய மாற்றம். அந்த ஆயிரமாண்டு அழுக்கை ஒழிக்க பாடுபட்டு கொண்டிருக்கிறோம். சுயமரியாதை, சமதர்ம சமூகத்தை உருவாக்க, இன்னும் நெடுந்துாரம் நாம் பயணிக்க வேண்டும். நம் பாதையும், பயணமும் நீண்டது.
சிலர், சமூகத்தில் ஆங்காங்கே நடக்கும் சம்பவங்களை காட்டி, இதுவா, பெரியார், அம்பேத்கர் மண் என, கேள்வி எழுப்புகின்றனர்.
அவர்களுக்கு சமூகத்தின் மீது அக்கறை இல்லை. மாறாக, அவர்களிடம் பிற்போக்குத்தனம் இன்னும் இருக்கிறது என்ற ஆவணப்பேச்சு தான் அது.
நமக்குள் ஏற்பட்டிருக்கும் முற்போக்கு, சமத்துவ எண்ணங்களும், சிந்தனைகளும் அனைவரிடமும் ஏற்பட வேண்டும்.
அதற்காக நாம் ஓயாமல் உழைக்க வேண்டும். வெறுப்பு அரசியலை விட, அன்பை விதைக்கும் அரசியல் தான் வலுவானது; ஆற்றல் வாய்ந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் வேலு, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.