அரசியல் காழ்ப்புணர்ச்சி, குறுகிய மனதுடன் குற்றம் சாட்டினார்; முதல்வர் மீது விஜய் குற்றச்சாட்டு
அரசியல் காழ்ப்புணர்ச்சி, குறுகிய மனதுடன் குற்றம் சாட்டினார்; முதல்வர் மீது விஜய் குற்றச்சாட்டு
UPDATED : நவ 05, 2025 03:00 PM
ADDED : நவ 05, 2025 02:00 PM

சென்னை: ''அமைதியாக இருந்த நேரத்தில் நம் மீது வன்ம அரசியல் பரப்பப்பட்டது. சட்டசபையில் பேசிய முதல்வர், அரசியல் காழ்ப்புணர்ச்சி, குறுகிய மனதுடன் குற்றம் சாட்டினார்,'' என்று தவெக
பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசினார்.
சென்னையில்
நடந்த தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசியதாவது: என் நெஞ்சில்
குடியிருக்கும் எனது தோழர்களுக்கும், தோழிகளுக்கும் தமிழக மக்களுக்கும்
என்னுடைய வணக்கம். நம்ம குடும்ப உறவுகளை இழந்த காரணத்தினால், சொல்ல
முடியாத வேதனையிலும், வலியிலும் இருந்தோம். அமைதி காத்து வந்த நேரத்தில்
நம்மை பற்றி, வன்ம அரசியல், அர்த்தமற்ற அவதூறுகள் பரப்பப்பட்டது. இதை
எல்லாம் சட்டம் மற்றும் சத்தியத்தின் துணை கொண்டு துடைத்து எறியத்தான்
போகிறோம்.
தமிழக சட்டசபையில் நமக்கு எதிராக நிகழ்ந்தப்பட்ட ஒரு
உரைக்கு, ஒரு நாகரிக பதிலடி கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
அரசியல் செய்ய விருப்பம் இல்லை என்று அடிக்கடி சொல்லும் முதல்வர் நம்மை குறிப்பிட்டு பல்வேறு அவதூறுகளை பதிவு செய்தார்.பெருந்தன்மை பற்றி பெயர் அளவில் மட்டும் பேசும் முதல்வர், அக்.,15 அன்று தமிழக சட்டசபையில்
நமக்கு எதிராக பேசிய பேச்சில், எவ்வளவு வன்மத்தை வெளிப்படுத்தினார் என்பதையும்,
எப்படிப்பட்ட அரசியல் செய்ய முயல்கிறார் என்பதையும் தமிழக மக்கள் உணராமலா
இருப்பார்கள்? இந்த கரூர் உடன் சேர்த்து ஐந்து,ஆறு மாவட்டத்தில்
மக்கள் சந்திப்பு எல்லாம் நடத்தி இருக்கிறோம். அங்கு எல்லாம் கடைசி
நிமிடம் வரை எங்களுக்கு அந்த இடத்தில் அனுமதி கொடுப்பார்களா, மாட்டார்களா
என்று இப்படி இழுத்தடித்து கொண்டு இருப்பார்கள்.
இந்தியாவிலேயே…
நாகையில் நான் சொன்னது மாதிரி தான். நாங்கள் ஒரு இடம் தேர்வு செய்து கேட்போம். மக்கள் இடைஞ்சல் இல்லாமல் பார்க்கிற மாதிரி. ஆனால் மக்கள் நெருக்கடியோடு நின்று பார்க்கும் மாதிரி எங்களுக்கு ஒரு இடத்தை கொடுப்பார்கள். இது எல்லாம் இடத்திலும் நடந்து கொண்டு இருக்கும்.
இந்தியாவிலேயே எந்த அரசியல் கட்சி தலைவருக்கும் கொடுக்கப்படாத நிபந்தனைகள் நமக்கு வழங்கப்பட்டது.
பஸ் உள்ளேயே இருந்து பார்க்க வேண்டும். மேலே வந்து கை காட்டக்கூடாது. இப்படி எல்லாம் அதீத கட்டுப்பாடுகளை கொடுத்த உடனே எங்கள் தரப்பில் இருந்து அறிக்கையும் வெளியிட்டோம்.
குறுகிய மனம் கொண்ட முதல்வர்
அதுமட்டுமின்றி, தமிழக வெற்றிக்கழகம் சார்பாக, அனைத்து கட்சிகளுக்கும் சமமான முறையான ஒரு பொது வழிகாட்டு முறையை வழங்க வேண்டும் என்று சொல்லி உயர்நீதிமன்றத்தையும் நாடி இருக்கிறோம்.
இதையும் தமிழக மக்கள் உணராமலா இருப்பார்கள். இப்படி ஒரு அரசியல் காழ்ப்புடன், நேர்மை திறனற்று, நம்மைப் பற்றி குற்றம் சாட்டியுள்ள, குறுகிய மனம் கொண்ட முதல்வருக்கு ஒரு சில கேள்விகள். 13.10.2025 அன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த விவாதங்கள், உத்தரவுகளை வைத்தும் இந்த கேள்விகள்.
இப்படி பொய் மூட்டைகளாக, நம்மை பற்றி அவதூறுகளை அவிழ்த்து விட்ட முதல்வருக்கும், திமுக அரசுக்கும், இந்த கபட நாடக திமுக அரசின் தில்லுமுல்லுகளை தாக்கி பிடிக்க இயலாமல் வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்றத்தில் திக்கி திணறி நின்றது, முதல்வருக்கு மறந்துவிட்டதா?
வடிகட்டிய பொய்
கரூர் சம்பவத்திற்கு பிறகு அவசர, அவசரமாக தனிநபர் ஆணையம், அந்த தனிநபர் ஆணையத்தையும் அவமதிக்கும் வகையில், அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் எல்லோரும் நம்மை பற்றி அவதூறுகளை பரப்பி, ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை அவசர, அவசரமாக நடத்தினர். இது எல்லாம் ஏன் நடக்குது, எதற்காக நடக்குது, அப்படி என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள். இதையும் தமிழக முதல்வர் மறந்துவிட்டாரா?
அதற்கு அப்புறம் தனிநபர் ஆணையத்தையே தலையில் கொட்டி வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அதுவும் வேற விஷயம். இப்படி கேள்வி கேட்ட உடனே ஏதாவது பதில் சொல்ல வேண்டும் என்று, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசும் போது உண்மை நிலையை தெளிவுப்படுத்த தான் என்று சட்ட ரீதியாகவும், சாமர்த்தியமாகவும் சொல்லி இருக்காங்க, 50 வருடமாக பொது வாழ்வில் இருக்கிற முதல்வர் சொன்னது, எவ்வளவு பெரிய வடிகட்டிய பொய், சப்பைக்கட்டு என்று நான் சொல்லல, உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது.
சந்தேகத்தை…!
அவர்கள் சொன்னது என்ன எல்லாம் என்று நாம் பார்ப்போம். அரசு, காவல் உயர் அதிகாரிகள் ,ஊடகங்களிடம் பேசியது என்பது, பொதுமக்கள் இடையே நியாயமான விசாரணை நடக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்த கூடும் என்றும், நியாயமான விசாரணை மூலம் மட்டுமே அந்த சந்தேகத்தை மீட்டெடுத்து ஆக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தமிழக அரசு மண்டையில் நறுக் என்று கொட்டியதை முதல்வர் மறந்து விட்டாரா?
உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்ஐடி அமைத்து உத்தரவிட்டார் அல்லவா? அந்த உத்தரவுக்கு திமுகவினர் கொண்டாட்டம் நடத்தி கூத்தடித்தார்கள் அல்லவா? அந்த உத்தரவு எந்த ஆவணத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது என்று நான் கேட்கவில்லை, உச்சநீதிமன்றம் கேட்டு இருக்கிறது.
மண்ணுக்குள்…!
அப்போதும் கூட உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞர்கள் மவுனம் காத்ததை நாடே பார்த்தது அல்லவா, இதையும் முதல்வர் மறந்துவிட்டாரா? உச்சப்பட்ச அதிகார மயக்கத்தில், இருந்து பேசினாரோ முதல்வர். மனிதாபிமானம், அரசியல் அறம், மாண்பு, இது ஏதுவும் இல்லாம் பேச்சில் மட்டும் பேசும் அரசியல் ஆதாய தேடுதல் ஆட்டத்தை முதல்வர் தொடங்கிவிட்டார். இது எல்லாம் அவர்களுக்கு புதுசா?
மக்களுக்கு இந்த அரசு மீதான நம்பிக்கை மொத்தமாக மண்ணுக்குள் புதைந்து விட்டது. 2026ம் ஆண்டு தேர்தலில் இந்த திமுக தலைமைக்கு மக்கள் புரிய வைப்பார்கள்.
மக்கள் தீர்ப்பிற்கு தலை வணங்குகிறோம் என்று அறிக்கை தயார் செய்து வைத்து கொள்ளுங்கள். இடையூறுகளை எல்லாம் தகர்த்து எறிவோம். மக்களுடன் களத்தில் நிற்போம். 2026ல் இரண்டு பேர் இடையே தான் போட்டி. திமுக, தவெக இடையே தான் போட்டி. 100 சதவீதம் வெற்றி நமக்கே, வாகைசூடுவோம், வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் பேசினார்.

