பொள்ளாச்சி பாலியல் வழக்கு; மே 13ல் தீர்ப்பு என அறிவிப்பு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு; மே 13ல் தீர்ப்பு என அறிவிப்பு
ADDED : ஏப் 29, 2025 07:19 AM
கோவை: 'பொள்ளாச்சி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், மே 13ல் தீர்ப்பு அளிக்கப்படும்' என, கோவை மகளிர் கோர்ட் நேற்று அறிவித்தது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், கல்லுாரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர்.
இது தொடர்பான வீடியோ வெளியானதால், 2019ல் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசார் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து விசாரித்தனர். சி.பி.சி.ஐ.டி., விசாரித்த வழக்கு, பின் சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.
சி.பி.ஐ., வழக்கில் சம்பந்தப்பட்ட திருநாவுக்கரசு, 25, உட்பட ஒன்பது பேரை சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது, 2019 மே 21ல் கோவை மகளிர் கோர்ட்டில், சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன் பிறகும், வழக்கை விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால், வழக்கை விரைந்து விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. பின், 2021 நவ., 11ல், ஒன்பது பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து, 'இன்கேமரா' முறையில் வழக்கை விசாரிக்க, கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கி, விசாரணை துவங்கப்பட்டது.
மகளிர் கோர்ட் நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில், 2023 பிப்., 24ல் சாட்சி விசாரணை துவங்கியது. வழக்கில் சாட்சி விசாரணை, அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு இறுதிவாதம் நேற்றுடன் முடிந்தது.
வழக்கின் தீர்ப்பு மே 13ல் அளிக்கப்படும் என, நீதிபதி நேற்று அறிவித்தார்.