புதிய வாக்காளருக்கு விண்ணப்ப படிவம்: தவிர்க்கும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள்
புதிய வாக்காளருக்கு விண்ணப்ப படிவம்: தவிர்க்கும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள்
ADDED : நவ 20, 2025 12:22 AM

சென்னை: புதிய வாக்காளர் விண்ணப்ப படிவங்களை, இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு வழங்குவதை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தவிர்ப்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை தேர்தல் கமிஷன் துவக்கி உள்ளது. முதற்கட்டமாக, வாக்காளர் கணக்கெடுப்பு பணி, 4ம் தேதி முதல் நடந்து வருகிறது.
18 வயது இப்பணிகளை டிசம்பர் 4க்குள் முடித்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட, ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வாக்காளர் கணக்கெடுப்பு பணியின் போது, 18 வயது நிரம்பிய முதல் முறை வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க திட்டமிடப்பட்டது.
இதற்காக கணக்கெடுப்பு படிவத்துடன், அந்த வீட்டில் உள்ள புதிய வாக்காளர்களை சேர்க்க, படிவம் 6 மற்றும் உறுதிமொழி படிவத்தை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், பெரும்பாலான ஓட்டுச்சாவடி அலுவலர்கள், புதிய வாக்காளர் விண்ணப்ப படிவத்தை, உடன் எடுத்து செல்வதுஇல்லை.
தேர்தல் கமிஷன் உத்தரவிட்டும், படிவம் 6 வழங்காததால், புதிய வாக்காளர்களை சேர்ப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதன் பின்னணியில், ஆளும்கட்சி இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
விஜய் கட்சி இது குறித்து, வாக்காளர் கள் தரப்பில் கூறப்படுவதாவது:
நடிகர் விஜய் துவக்கியுள்ள த.வெ.க.,வில், இளைஞர்கள், இளம்பெண்கள் அதிகளவில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலருக்கு ஓட்டுரிமை இல்லை.
எனவே, 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, அக்கட்சி தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்த்தால், தி.மு.க.,விற்கு சட்டசபை தேர்தலில் பின்னடைவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இதை மனதில் வைத்து, படிவம் 6 மற்றும் உறுதிமொழி படிவத்தை, ஆளும்கட்சி ஆதரவு ஒட்டுச்சாவடி அலுவலர்கள் வழங்குவதில்லை.
இனியாவது, ஜனநாயக முறைப்படி வாக்காளர் பட்டியலை தயாரிக்க, 18 வயது நிரம்பிய அனைவருக்கும், படிவம் 6 மற்றும் உறுதிமொழி படிவத்தை வழங்க, தேர்தல் கமிஷன் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.

