இயற்கை பொருட்களை கொண்டே விநாயகர் சிலைகள் தயாரிக்க வேண்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுரை
இயற்கை பொருட்களை கொண்டே விநாயகர் சிலைகள் தயாரிக்க வேண்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுரை
ADDED : ஆக 08, 2025 11:44 PM
சென்னை:'இயற்கை பொருட்களை கொண்டே விநாயகர் சிலைகளை தயாரிக்க வேண்டும்' என, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
வரும், 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அதன்பின், வழிபாடு செய்த விநாயகர் சிலைகளை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, நீர் நிலைகளில் கரைக்க வேண்டும்.
ஒத்துழைப்பு மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும், விநாயகர் சிலைகளை கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
களி மண்ணால் செய்யப்பட்ட, 'பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக், தெர்மாகோல்' கலவையற்ற, சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டுமே, பாதுகாப்பான முறையில் நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும்.
சிலைகளுக்கான ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர்க்கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க, பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
சிலைகளுக்கு வர்ணம் பூ ச, நச்சு மற்றும் மட்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. சிலைகளின் மீது எனாமல், செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது.
மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மட்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள், பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள், இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
சுற்றுச்சூழல் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளின்படி, மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே, விநாயகர் சிலை களை கரைக்க வேண்டும்.
சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு, விநாயகர் சதுர்த்தி விழாவை பொது மக்கள் கொண்டாட வேண்டும். மேலும் விபரங்களுக்கு கலெக்டர், எஸ்.பி., மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை அணுகலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.