தொழிற்சாலைகளுக்கு 4 நிலை பசுமை சான்றிதழ் வழங்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை
தொழிற்சாலைகளுக்கு 4 நிலை பசுமை சான்றிதழ் வழங்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை
ADDED : செப் 20, 2026 11:04 PM
சென்னை: தமிழகத்தில் தொழிற்சாலைகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த செயல்பாடு அடிப்படையில், நான்கு நிலைகளில் பசுமை சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கையை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், சுற்றுச்சூழல் பாதிப்புகளும் பெருகி வருகின்றன. தொழில் வளர்ச்சியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற அடிப்படையில், இதில் சமநிலையை பராமரிக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழில்கள், அவற்றால் ஏற்படும் மாசு அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி, எந்த வகை தொழில் நிறுவனம், எங்கு செயல்பட வேண்டும் என்று பார்த்து, அதற்கான அனுமதிகள் வழங்கப்படுகின்றன.
இருப்பினும், இயல்பு நிலையில் தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச் சூழல் தாக்கம் குறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் கவனம் செலுத்தி வருகிறது.
இதில், உற்பத்தியுடன் சுற்றுச்சூழல் சார்ந்த செயல்திறனை மேம்படுத்த, மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தொழிற்சாலைகளுக்கு அவற்றின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்திறனை ஊக்குவிக்க, புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, தொழிற்சாலைகளுக்கு பசுமை மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தொழிற்சாலைகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்திறனை மதிப்பீடு செய்ய, புதிய நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டை மதிப்பீடு செய்து, பசுமை சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. பிளாட்டினம், தங்கம், வெள்ளி, வெண்கலம் என நான்கு நிலைகளில், இந்தச் சான்றிதழ் வழங்கப்படும்.
அதன் அடிப்படையில், தொழிற்சாலைகளுக்கு பல்வேறு ஊக்க சலுகைகளும் வழங்கப்பட உள்ளன. அதன்படி, சுற்றுச்சூழல் சார்ந்த செயல் திறன் மதிப்பீட்டு வழிமுறைகளை வகுக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. விரைவில் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
