பாலிடெக்னிக் மாதிரி வினாத்தாளில் குளறுபடி; பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளால் 'ஷாக்'
பாலிடெக்னிக் மாதிரி வினாத்தாளில் குளறுபடி; பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகளால் 'ஷாக்'
ADDED : அக் 25, 2025 05:38 AM

சென்னை: பாலிடெக்னிக் டிப்ளோமா செமஸ்டர் தேர்வு மாதிரி வினாத்தாளில், பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டிருப்பது, விரிவுரையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் இயங்கும், அனைத்து பாலிடெக்னிக் கல்லுாரிகளிலும், நடப்பு கல்வியாண்டு முதல், எம்.சி.க்யூ., எனப்படும், சரியான விடைகளை தேர்வு செய்யும் வடிவில், செமஸ்டர் தேர்வுகள் நடத்திட, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்தது. அதன்படியே, கல்வியாண்டு துவக்கத்தில் இருந்து மாணவர்களுக்கு பாடங்களும் நடத்தப்பட்டன.
பேராசிரியர்களின் கருத்து கேட்புகளுக்கு பின், அந்த முடிவில் இருந்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் பின்வாங்கியது. இறுதியாக, எம்.சி.க்யூ., வடிவில் ஒரு மதிப்பெண், எழுத்து தேர்வு வடிவில், இரண்டு மற்றும், 10 மதிப்பெண் அடங்கிய வினாத்தாள் தயாரித்து, செமஸ்டர் தேர்வுகள் நடத்த தீர்மானிக்கப்பட்டது. கடந்த சில ஆண் டுகளுக்கு முன், பொதுத் தேர்வு எழுதும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள், தேர்வை எளிமையாக எதிர்கொள்ள, மாதிரி வினாத்தாள் தொகுப்புகள் வெளியிடப்பட்டன. தற்போது, அந்த நடைமுறை இல்லை.
இந்நிலையில், பாலிடெக்னிக் டிப்ளமோ மாணவர்கள், செமஸ்டர் தேர்வை சிரமமின்றி எழுத, மாதிரி வினாத்தாள் தொகுப்புகள், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டன. இந்த மாதிரி வினாத்தாள்களில், பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக விரிவுரையாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து விரிவுரையாளர்கள் கூறியதாவது:
டிப்ளமோ படிப்புக்கான செமஸ்டர் தேர்வு அடுத்த மாதம் துவங்க உள்ளது. இறுதி கட்டத்தில், அவசர அவசரமாக மாதிரி வினாத்தாள்கள் கல்லுாரிகளுக்கு வழங்கப்பட்டன. அதில், பல்வேறு குளறுபடிகள் இருக்கின்றன. பாடத்திட்டத்திற்கு சம்பந்தமே இல்லாத கேள்விகள், மாதிரி வினாத்தாளில் வழங்கப்பட்டு உள்ளன. மின்னணுவியல் துறை சார்ந்த பாடத் தேர்வை, கணித வடிவில் விடை அளிக்கும் வகையில் வினாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது, மாணவர்கள் தேர்வு மனநிலையை பாதிக்கும். வினாக்களை எளிமைப்படுத்துகிறோம் என்ற பெயரில், மாணவர்களை குழப்பும் வகையில், வினாக்கள் கேட்கப்படுவது, தேர்ச்சி சதவீதத்தை பெரிதாக பாதிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

