பொங்கல் பண்டிகை விழா; தஞ்சாவூரில் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பங்கேற்பு?
பொங்கல் பண்டிகை விழா; தஞ்சாவூரில் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பங்கேற்பு?
ADDED : டிச 15, 2025 03:10 AM

சென்னை : டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில், ஜனவரி மாதம் நடக்கும் பொங்கல் பண்டிகை விழாவில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை, பிரதான அரசியல் கட்சிகள் துவக்கி உள்ளன. தி.மு.க., கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பதற்கான பேச்சு நடந்து வருகிறது. அ.தி.மு.க., கூட்டணியை பலப்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பீஹாரை தொடர்ந்து, தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும் என, பா.ஜ., தேசிய தலைமை விரும்புகிறது. இதற்கான வியூகங்கள், டில்லியில் வகுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழகத்தில் அதிருப்தியில் உள்ள விவசாய சங்கங்கள், தொழிலாளர் அமைப்புகள் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்டோரை அணி திரட்டும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக கொண்ட, டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் நடக்க உள்ள பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்க, பிரதமர் மோடி அடுத்த மாதம் மூன்று நாள் பயணமாக தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக, விவசாய சங்க நிர்வாகிகள் சிலரை டில்லிக்கு அழைத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி உள்ளார். பொங்கல் பண்டிகை நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த, தமிழக பா.ஜ., தலைமைக்கு தேசிய தலைமை அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

