ADDED : ஜன 12, 2026 05:55 AM

திருப்பூர்: ரேஷன் கடைகளில், அரிசி, சர்க்கரை பொங்கல் பரிசு பொருட்களைவிட, 3,000 ரூபாய் ரொக்கத்தை வாங்கிச் செல்லவே, கார்டுதாரர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு, கடந்த 8ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டம் தோறும், அரிசி பெறும் அனைத்து கார்டுதாரர்கள், பயனாளியாக சேர்க்கப்பட்டு, ஒவ்வொரு கார்டு தாரருக்கும், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, வேஷ்டி - சேலை மற்றும் 3,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படுகிறது.
அதிகாரிகள் கூறியதாவது: நாள், நேரம் குறிப்பிட்டு டோக்கன் வழங்கியபோதும், சிலர் முன்னரே, பரிசு தொகுப்பு கேட்டு ரேஷன் கடைகளுக்கு வந்துவிடுகின்றனர்.
சிலர், 'அரிசி, சர்க்கரை, கரும்பு எல்லாம் வேண்டாம். பணம் மட்டும் கொடுங்க... போதும்' என, ரொக்கத்தை மட்டும் வாங்கிச் செல்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில், 8 லட்சத்து 2,201 கார்டுதாரர்கள், நடப்பாண்டு பரிசு தொகுப்பு பெறும் பயனாளிகளாக உள்ளனர். அனைவருக்கும், அரிசி, சர்க்கரை, கரும்பு, ரொக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், சிலர், பரிசு தொகுப்பு பொருட்களை நிராகரித்துவிட்டு, ரொக்கத்தை மட்டும் வாங்கிச் செல்கின்றனர். கடந்த மூன்று நாட்களில், மொத்த கார்டுதாரரில், 68.42 சதவீதம் பேர், அதாவது, 5 லட்சத்து 48 ஆயிரத்து 891 பேர், ரொக்கம் வாங்கியுள்ளனர்.
ஆனால், 65.23 சதவீதம் பேர், அதாவது, 5 லட்சத்து 23 ஆயிரத்து 359 பேர் மட்டுமே, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பரிசு தொகுப்பு பெற்றுள்ளனர். பரிசுத்தொகுப்பை 25 ஆயிரத்து 532 பேர் ஒதுக்கி விட்டு, ரொக்கத்தை மட்டும் வாங்கிச் சென்றுள்ளனர்.

