ADDED : மார் 18, 2025 06:31 AM

மதுரை : சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் மீது சி.பி.ஐ., பதிந்த வழக்கை ரத்து செய்யக் கோரியதில் டி.எஸ்.பி., காதர்பாஷாவிற்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பொன் மாணிக்கவேல் பணிபுரிந்தார் (2018ல் ஓய்வு பெற்றார்). சர்வதேச சிலை கடத்தல்காரர் தீனதயாளனை கைது செய்தார். அவரது வாக்குமூலம் அடிப்படையில், திருவள்ளூரில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த காதர்பாஷா மீது பொன்மாணிக்கவேல் வழக்கு பதிந்தார்.
காதர் பாஷா, 'தீனதயாளனை ஒரு வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க என் மீது பொய் வழக்கு பதியப்பட்டது. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,' என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்நீதிமன்றம், 'சி.பி.ஐ.,விசாரிக்க வேண்டும்.முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என உத்தரவிட்டது.
சி.பி.ஐ., போலீசார் பொன்மாணிக்கவேல் மீது வழக்கு பதிந்தனர். அவர் ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை தனக்கு வழங்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும். சி.பி.ஐ.,பதிந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுதாரருக்கு எதிரான வழக்கின் மீது மேல் விசாரணை மேற்கொள்ள, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்காலத் தடை விதித்து மார்ச் 13ல் தனி நீதிபதி உத்தரவிட்டார்.
நேற்று விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி: இவ்வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள காதர்பாஷாவின் கருத்தை அறிய வேண்டியுள்ளது. அவரதுதரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி வாதிடநோட்டீஸ் அனுப்பி மார்ச் 28 க்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.