செம்மண் குவாரி முறைகேடு வழக்கு பொய்யானது என பொன்முடி வாதம்
செம்மண் குவாரி முறைகேடு வழக்கு பொய்யானது என பொன்முடி வாதம்
UPDATED : நவ 12, 2025 05:16 AM
ADDED : நவ 12, 2025 04:33 AM

விழுப்புரம்: செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகினர்.
விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறை செம்மண் குவாரியில் விதிமீறி செம்மண் எடுத்து அரசுக்கு ரூ. 28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி உள்ளிட்ட பலர் மீது, கடந்த 2012ம் ஆண்டு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் 57 பேரிடம், கடந்த மாதம் விசாரணை முடிந்தது. இதில், 30 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர்.
நேற்று, இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடி, கவுதமசிகாமணி உள்ளிட்ட ஏழு பேர் ஆஜராகினர். அவர்களிடம் அரசு தரப்பு சாட்சிகள் அளித்த சாட்சியம் குறித்த விபரங்கள் மற்றும் குற்றச்சாட்டு சம்பந்தமாக தனித்தனியாக மாவட்ட நீதிபதி மணிமொழி கேள்வி எழுப்பினார்.
அப்போது, 'செம்மண் குவாரியை குத்தகைக்கு எடுத்தது உண்மை தான். ஆனால், அரசு நிர்ணயித்த அளவைவிட கூடுதலாகவும், முறைகேடாகவும் செம்மண் எடுக்கவில்லை' எனவும், 'அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தங்கள் மீது பொய்வழக்கு போட்டுள்ளது' எனவும் பொன்முடி உள்ளிட்ட ஏழு பேரும் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர்.

