ADDED : ஏப் 17, 2025 02:45 AM

தர்மபுரி:''பொன்முடிக்கு சேரும் பெருமையெல்லாம், முதல்வர் ஸ்டாலினையும் சேரும்,'' என, தமிழக, பா.ஜ., மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் கூறினார்.
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பாரத மாதா ஆலயம் திறப்பு தொடர்பான வழக்கில் ஆஜராக, நேற்று தர்மபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., கூட்டணி அமைத்திருக்கிறது. கூட்டணியில் யாருக்கு எதை தர வேண்டுமென, கூட்டணிக்கு தலைமை பொறுப்பை ஏற்றுள்ள, அ.தி.மு.க.,வை சார்ந்தது
அண்ணாமலை மேலும் பல்வேறு பொறுப்புகளுக்கு செல்ல இருக்கிறார். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைத்து இருப்பதை சகிக்க முடியாத, தி.மு.க.,வை சார்ந்தவர்கள் விஷமத்தனமான பொய் பிரசாரங்களை பரப்பி வருகின்றனர்.
பெண்கள், அமைச்சர் பொன்முடியின் உருவ படத்திற்கு செருப்பு போட்டு, உருவப்படத்தை அடித்துள்ளனர். உயிர் இல்லாத படத்தை அடிப்பதில் பிரயோஜனமில்லை.
தமிழக பெண்கள், அமைச்சர் பொன்முடி மீது, கோபத்தோடு இருக்கின்றனர். பொன்முடிக்கு சேரும் பெருமையெல்லாம் முதல்வர் ஸ்டாலினையும் சேரும்.
வெறும் பொன்முடியை மட்டும் வெளியேற்றக்கூடாது. ஒட்டுமொத்த, தி.மு.க., மந்திரி சபையையும் துாக்கி எறிய வேண்டும். தி.மு.க., ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படுவதற்கு, பொன்முடி மாதிரியான ஆட்களே போதும்.
இவ்வாறு, அவர் கூறினார்.