மோசமான நிதி நிர்வாகம்: திமுக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு
மோசமான நிதி நிர்வாகம்: திமுக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு
ADDED : அக் 18, 2025 04:08 PM

சென்னை: வாங்கிய கடனில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக முலதன செலவு செய்து மோசமான நிதி நிர்வாகம் செய்யும் திமுக அரசு என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் 2023-24ம் ஆண்டில் திமுக அரசு கடனாக வாங்கிய ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 597 கோடியில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக ரூ.40,500 கோடியை மட்டுமே மூலதன உருவாக்கத்திற்காக செலவிட்டிருப்பதாகவும், இது திமுக அரசின் மோசமான நிதி நிர்வாகத்தைக் காட்டுவதாகவும் தலைமைக் கணக்காயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சாலைகள், பாலங்கள், பாசனக் கட்டமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட சொத்துகளை உருவாக்குவதற்காகவும், பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காகவும் செய்யப் படும் செலவுகள் மூலதனச் செலவுகள் என்று அழைக்கப்படுகின்றன.
2023-24ம் ஆண்டில் ரூ.1.31 லட்சம் கோடியை கடனாக வாங்கிய திமுக அரசு, அதில் மூன்றில் ஒரு பங்கை மட்டும் மூலதனச் செலவுகளுக்கான செலவிட்டு விட்டு, மீதமுள்ள தொகையை அன்றாட செலவுகளுக்கான வருவாய் செலவினங்களுக்கால செலவிட்டிருக்கிறது. இது தான் திமுக அரசின் படுதோல்வி.
நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறையை ஒழித்து, ரூ.1218 கோடி வருவாய் உபரி ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், வருவாய் பற்றாக்குறை ரூ.52,781.17 கோடியாக அதிகரித்து விட்டது. இதை விட மோசமாக நிதிநிலையை எந்த அரசாலும் சீரழிக்க முடியாது.
திமுக அரசு இன்னும் கூட நிதிநிலையை மேம்படுத்தவில்லை. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் கூட ரூ.14,307.74 கோடி மூலதன செலவு செய்ய வேண்டிய திமுக அரசு அதில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாக ரூ.4,155.74 கோடி மட்டுமே செலவிட்டிருக்கிறது.
ஒருபுறம் கடனை வாங்கிக் குவிக்கும் திமுக அரசு, அதை சரியாக செலவழிக்காமல் வீணடித்துக் கொண்டிருக்கிறது. வீண் செலவுகளை சமாளிக்க வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி மக்களைக் கொடுமைப்படுத்துகிறது. இதற்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் மறக்க முடியாத அளவுக்கு பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.