பஞ்சமாபாதகம்! கோவையில் ஆசிட் ஊற்றி பூவரசு மரம் கொலை!
பஞ்சமாபாதகம்! கோவையில் ஆசிட் ஊற்றி பூவரசு மரம் கொலை!
UPDATED : நவ 11, 2024 04:55 PM
ADDED : நவ 11, 2024 04:52 PM

கோவை: கோவையில் செழிப்புடன் வளர்ந்திருந்த பூவரசு மரத்தை ஆசிட் ஊற்றி பட்டுப் போகச் செய்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
உலகெங்கும் இப்போது மரங்களின் முக்கியத்துவம் பற்றி மக்கள் மத்தியிலும் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. நல்ல மழை பொழிவுக்கும், தரமான ஆக்சிஜனுக்கும் மரங்கள் அவசியம்.
அதை உணர்ந்து தான் முடிந்த இடங்களில் எல்லாம் மரங்களை வளர்க்க அரசும் தன்னார்வலர்களும் முயற்சி மேற்கொள்கின்றனர். அதே போல மரத்தை வெட்டுவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
இத்தகைய சூழ்நிலையில், கோவையில் ஓங்கி உயர்ந்து நன்றாக வளர்ந்திருந்த பூவரசு மரத்தை ஆசிட் ஊற்றி அழித்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கோவை போத்தனூர் சாலையில் கருப்பராயன் கோவில் பஸ் ஸ்டாப்பில் பூவரசு மரம் ஒன்று இருந்தது. கிட்டத்தட்ட 13 வயதான பூவரசு மரம் அவ்வழியே செல்வோரும், அப்பகுதி மக்களும் இளைப்பாற நிழல் தந்துள்ளது.
இந்நிலையில், அந்த மரம் இன்று மதியம் திடீரென சாய்ந்து சாலையில் விழுந்துள்ளது. இதை கண்டு அதிர்ந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தனர்.
நன்றாக ஆரோக்கியத்துடன் காட்சி தந்த 13 வயது மரம் திடீரென்று எவ்வாறு சரிந்து விழும் என்று யோசிக்க ஆரம்பித்தனர். பின்னர், மரத்தின் அருகில் வந்து பார்த்த போது, அதன் வேர் பாகம் துளையிடப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். எதற்காக இந்த துளை என்று மேலும் உற்று பார்த்த போது, அது வழியாக மரத்தின் வேர்களுக்கு ஆசிட் ஊற்றப்பட்டு இருப்பதைக் கண்டு ஒருகணம் அதிர்ந்தே போயினர்.
அடிப்பகுதியில் 3 இடங்களில் பெரியதுளை போடப்பட்டு அதன் வழியாக ஆசிட் ஊற்றப்பட்டு இருந்தது. அதன் எதிரொலியாக வேர் பகுதி பட்டுப்போய் மரம் சாய்ந்துள்ளதை அறிந்து, வருவாய் கோட்டாச்சியர், வட்டாச்சியர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த வருவாய்துறையினர், அந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். குறிப்பிட்ட அந்த இடத்தில் பஸ் ஸ்டாப்பில் உள்ள கடை ஒன்றின் பார்வையை மரம் மறைக்கிறது என்பதற்காக அதற்கு ஆசிட் ஊற்றி பட்டுப் போக செய்ததை விசாரணையில் கண்டுபிடித்தனர். இது பற்றி போலீசில் புகார் அளிக்க உள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
பொது இடத்தில் வளர்ந்து நின்று நிழல் பரப்பிய பூவரசு மரத்தை, சுயநலத்துக்காக வீழ்த்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.