'யு டியூப்'பில் ஆபாச உள்ளடக்கம் மத்திய அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்
'யு டியூப்'பில் ஆபாச உள்ளடக்கம் மத்திய அரசுக்கு கோர்ட் நோட்டீஸ்
UPDATED : பிப் 19, 2025 06:20 AM
ADDED : பிப் 18, 2025 11:08 PM

புதுடில்லி : 'சமூக ஊடகமான, 'யு டியூப்'பில் ஆபாச உள்ளடக்கத்தை கட்டுப்படுத்த, ஏதாவது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதில் கட்டுப்பாடுகள் இல்லாததால், 'யு டியூபர்'கள் தவறாக பயன்படுத்தி வருகின்றனர்' என, கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
சமூக ஊடகம்
பிரபல தேடல் பொறி நிறுவனமான, 'கூகுள்' நிறுவனத்தின் சமூக ஊடகமான, யு டியூப்பில், காமெடி நடிகர் சமய் ரெய்னாவின், 'இந்தியா காட் லேட்டன்ட்' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
சமீபத்தில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியில், நடுவர்களில் ஒருவராக பங்கேற்ற பிரபல யு டியூபர் ரன்வீர் அல்லாபாடியா, போட்டியாளர் ஒருவரிடம் பெற்றோர் உடலுறவு முறை குறித்து அருவருக்கத்தக்க வகையில் கேள்வி கேட்டார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியது. மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உட்பட பல்வேறு தரப்பினர் ரன்வீர் அல்லாபாடியாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபமானதை அடுத்து, தன் பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டார். தொடர்ந்து, யு டியூப்பிலும் அந்த வீடியோ நீக்கப்பட்டது.
அருவருக்கத்தக்க வகையில் கேள்வி கேட்ட யு டியூபர் ரன்வீர் அல்லாபாடியா மீது, மஹாராஷ்டிராவின் மும்பை, அசாமின் குவஹாத்தி, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை, ஒரே வழக்காக இணைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ரன்வீர் அல்லாபாடியா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் சூர்ய காந்த், என்.கோட்டீஸ்வர் சிங் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
பிரபலம் என்பதால் மனதில் தோன்றுவதை எல்லாம் ரன்வீர் அல்லாபாடியா பேசலாமா? அவரது கருத்தை இந்த பூமியில் யாரும் ரசிக்க மாட்டார்கள். இது, அவரது வக்கிரமான மனதை காட்டுகிறது.
நடவடிக்கை
இது ஆபாசம் இல்லையென்றால், வேறு எது ஆபாசம்? ஆபாசமாக பேசுவது நகைச்சுவை அல்ல. நாங்கள் ஏன் உங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது இணைக்க வேண்டும்?
'இந்தியா காட் லேட்டன்ட்' நிகழ்ச்சியின் அடிப்படையில், இனி, ரன்வீர் அல்லாபாடியாவுக்கு எதிராக எந்த வழக்கும் பதிவு செய்யக் கூடாது.
அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் இருந்தால், மும்பை அல்லது குவஹாத்தி போலீசாரிடம் அவர் பாதுகாப்பு கேட்கலாம்.
விசாரணைக்கு ஒத்துழைக்கும் வரை, இந்த வழக்கில் அவரை கைது செய்யக் கூடாது. தன் பாஸ்போர்ட்டை, போலீசாரிடம் ரன்வீர் அல்லாபாடியா ஒப்படைக்க வேண்டும்.
நீதிமன்ற அனுமதி இல்லாமல், நாட்டை விட்டு அவர் வெளியேற முயற்சிக்கக் கூடாது. மறு அறிவிப்பு வரும் வரை, அவரும், அவரது நண்பர்களும் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாது.
யு டியூப்பில் ஆபாச உள்ளடக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் இல்லாததால், யு டியூபர்கள் வாய்க்கு வந்தபடி பேசி வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
இதில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். சமூக ஊடகங்களில் ஆபாச உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் உள்ள வெற்றிடத்தை சமாளிக்க, அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.