பயங்கரவாதிகளை நாயகர்களாக சித்தரிப்பது குண்டுவைத்ததைக் காட்டிலும் படுபாதகம்: தமிழக பா.ஜ.,
பயங்கரவாதிகளை நாயகர்களாக சித்தரிப்பது குண்டுவைத்ததைக் காட்டிலும் படுபாதகம்: தமிழக பா.ஜ.,
ADDED : டிச 17, 2024 05:15 PM

சென்னை: '' பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டோரை நாயகர்களாக சித்தரிப்பது குண்டு வெடிப்பு நிகழ்த்தியதை விட படு பாதக செயல், '' என தமிழக பா.ஜ.,வின் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
கோவையில், 1998ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு வந்திருந்த பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ஆர்.எஸ்.புரம் டி.பி.,ரோடு சந்திப்பில் பேச இருந்த மேடைக்கு அருகே குண்டு வெடித்தது. தொடர்ந்து, கோவையில், 14 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.அதில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, 58 பேர் கொல்லப்பட்டனர்; 231 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக அல் -- உம்மா இயக்க நிறுவனர் பாஷா உட்பட, 166 பேரை போலீசார் கைது செய்தனர். 26 ஆண்டுகளாக பாஷா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடல்நலக்குறைவால் ஜாமினில் வெளியே வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று அவர் மரணமடைந்தார். இன்று அவரது உடல் , ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்பட்டது.
இது தொடர்பாக தமிழக பா.ஜ., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கோவை குண்டுவெடிப்பிற்கு காரணமான பாஷா நேற்று உயிரிழந்த நிலையில், சில அரசியல் கட்சிகளை சார்ந்தவர்கள் அந்த நபரை ஏதோ கதாநாயகன் போல் போற்றுவதும், போராளி என்று குறிப்பிட்டு புளகாங்கிதம் அடைவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கொலை குற்றவாளிகளை, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டோரை 'ஹீரோக்களாக' சித்தரிப்பது குண்டு வெடிப்பு நிகழ்த்தியதை விட படு பாதக செயல்.
எந்த ஒரு தனிநபரின் இறுதி சடங்கும் மரியாதையோடு அனுமதிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், பல இறுதி ஊர்வலங்களுக்கு காரணமான ஒரு நபரின் இறுதி சடங்கை பெரிய அளவில் நடத்த அனுமதித்தது முறையல்ல.
வங்கதேச ஹிந்துக்களுக்காக குரல் கொடுத்த தமிழக மக்களை, ஹிந்து உணர்வாளர்களை கைது செய்து ஒரு நாள் முழுக்க சிறையில் வைத்த திராவிட மாடல் அரசு, 60 உயிர்களை பலி கொண்ட, பல நூற்றுக்கணக்கான மக்களை செயலிழக்கச் செய்த, கோடிக்கணக்கான மதிப்புள்ள பொது சொத்துக்களை இழப்பதற்கு காரணமான ஒரு நபரின் இறுதி ஊர்வலத்தை ஒரு தலைவரின் இறுதி ஊர்வலத்திற்கு இணையாக நடத்த அனுமதித்தது கண்டனத்திற்குரியது.
இன்றும் அல்-உம்மாவை தோற்றுவித்த, தீவிரமாக செயல்பட்ட பலர் தீவிர அரசியலிலும், மத அமைப்புகளிலும் உள்ளனர் என்பதை தமிழக அரசும், காவல் துறையும் மறந்து விடக்கூடாது. இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.