ADDED : பிப் 20, 2025 06:38 AM

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ.வினர் ஒட்டிய போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைப்படி மும்மொழி திட்டத்தை அமல்படுத்துவதற்கு, தமிழகத்தில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்காக ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ., சார்பில், நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை நகர் முழுதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
அதில், 'முதல்வர் ஸ்டாலின் அவர்களே, இன்னும் எத்தனை காலத்திற்கு மொழி உணர்வை துாண்டி அரசியல் செய்வீர்கள்? நீங்கள் உங்கள் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில் மும்மொழி திட்டம். உங்கள் குடும்பத்து மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் மும்மொழி திட்டம். அனைத்து தனியார் பள்ளிகளிலும் மும்மொழி திட்டம். எங்கள் ஏழை மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் மும்மொழி திட்டம் மறுப்பது ஏன்? ஊருக்குதான் உபதேசமா? மக்கள் விழித்துக் கொண்டார்கள்'' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
இந்த போஸ்டரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த போஸ்டர்கள் அனைத்தும் கிழித்து எறியப்பட்டன.
அதிர்ச்சி அடைந்த பா.ஜ.,வினர் மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு தலைமையில் ஊர்வலமாக சென்று, போஸ்டரை கிழித்த விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீசில் புகார் அளித்தனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

