உதயநிதிக்கு எதிராக போஸ்டர்: கிழித்தெறிந்த தி.மு.க.,வினர்
உதயநிதிக்கு எதிராக போஸ்டர்: கிழித்தெறிந்த தி.மு.க.,வினர்
ADDED : ஜன 01, 2025 05:43 AM

சென்னை : சென்னை அண்ணா பல்கலையின் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுத்தியதாக கோட்டூர்புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
'தனக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுத்தியவர், போனில் பேசும்போது சார் என யாருடனோ பேசினார்' என புகாரில் அம்மாணவி குறிப்பிட்டுஉள்ளார்.
இதையடுத்து, குற்றவாளி என போலீசார் அடையாளம் கண்டிருக்கும் ஞானசேகரன், 'சார் என யாரிடம் பேசினார்?' என எதிர்க்கட்சிகள், தமிழக அரசை கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்தெடுக்கின்றன.
குறிப்பாக, அ.தி.மு.க., சார்பில், 'யார் அந்த சார்?' என கேட்டு, போஸ்டர் ஒட்டி பிரசாரம் செய்ததோடு, முக்கியமான இடங்களில், அதே கேள்வியுடன் பதாகைகள் ஏந்தியும் மக்கள் கவனம் ஈர்த்தனர்.
இந்நிலையில், 'யார் அந்த சார்? சீக்கிரம் கண்டுபிடித்துச் சொல்லுங்க உதயநிதி சார்' என அச்சிடப்பட்ட போஸ்டர்கள், துணை முதல்வர் உதயநிதியின் தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியில் பா.ஜ., சார்பில் ஒட்டப்பட்டு உள்ளன.
உதயநிதியை வம்புக்கிழுப்பது போல ஒட்டப்பட்டிருக்கும் அந்த போஸ்டர்களை, தொகுதி தி.மு.க.,வினர் கிழித்தெறிந்தனர்.