தீர்வு கிடைக்கும் வரை போராட விசைத்தறியாளர்கள் முடிவு! வேலையிழப்பால் தொழிலாளர்கள் தவிப்பு
தீர்வு கிடைக்கும் வரை போராட விசைத்தறியாளர்கள் முடிவு! வேலையிழப்பால் தொழிலாளர்கள் தவிப்பு
ADDED : ஏப் 02, 2025 10:27 PM

சோமனுார் :கூலி உயர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர்வது என, விசைத்தறியாளர்கள் முடிவு செய்துள்ள நிலையில், வேலை இழப்பால் நெசவு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில், கடந்த, 19 ம் தேதி முதல் கூலி உயர்வு கேட்டு விசைத்தறியாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 1.5 லட்சம் விசைத்தறிகள் முடங்கியுள்ளன. பல லட்சம் மீட்டர் துணி உற்பத்தி குறைந்து, பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் தவிப்பு
கடந்த, 15 நாட்களாக நடக்கும் போராட்டத்தால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். அச்சுப்பிணைத்தல், ரீடு மாற்றுதல், செட்டு வாங்குதல், தறி இயக்குதல், லீவு தறி ஓட்டுதல் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளோர், தினமும் கிடைக்கும் கூலியை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
வீட்டு வாடகை, குடும்ப செலவு, மருத்துவ செலவு உள்ளிட்டவைகளை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வருமானம் இன்றி தவிக்கும் அவர்கள், வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என, கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம், சோமனூர் சங்க தலைவர் பூபதி தலைமையில் நேற்று நடந்தது. அவிநாசி சங்க தலைவர் முத்துசாமி, தெக்கலூர் சங்க தலைவர் பொன்னுசாமி முன்னிலை வகித்தனர்.
கூலி உயர்வு பேச்சுவார்த்தைக்கு, அரசு நிர்வாகம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
போராட்டம் தொடரும்
இதுகுறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த, 15 மாதங்களாக சாதா விசைத்தறிக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என, பல போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்காததால், தீர்வு கிடைக்கவில்லை. அதனால், கடந்த, 19 ம்தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
அமைச்சர் சாமிநாதன் அறிவுறுத்தலின் பேரில் நேற்று கலெக்டருடன் பேச்சுவார்த்தை நடந்தது. ஓரிரு நாளில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் பேசி,தீர்வு ஏற்படுத்துவதாக உறுதி அளித்ததால், நேற்று அவிநாசியில் நடக்க இருந்த உண்ணாவிரத போராட்டத்தை ஒத்தி வைத்தோம்.
கூலி உயர்வு பிரச்னையில் தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடருவது என, தீர்மானித்துள்ளோம். தொழிலாளர்கள் வேலை இழப்பு, வர்த்தகம், உற்பத்தி பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

