விமான படை தளங்களுக்கு மின் வினியோகம்: தமிழகத்தில் உரிமம் கேட்கிறது ராணுவம்
விமான படை தளங்களுக்கு மின் வினியோகம்: தமிழகத்தில் உரிமம் கேட்கிறது ராணுவம்
ADDED : டிச 20, 2024 06:49 AM

சென்னை: தமிழகத்தில் மின் வாரியம் மட்டுமே, மின் வினியோகம் செய்யும் பணியை மேற்கொள்ளும் நிலையில், முதல் முறையாக தாம்பரம், தஞ்சை விமான படை தளங்களுக்கு மின் வினியோகம் செய்யும் உரிமம் வழங்குமாறு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், ராணுவத்தை சேர்ந்த மிலிட்டரி இன்ஜினியர் சர்வீசஸ் அனுமதி கேட்டுள்ளது.
தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை, விவசாயம் உட்பட, 3.36 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இவை அனைத்துக்கும் மின் வினியோகம் செய்யும் பணியை, அரசு நிறுவனமான மின் வாரியம் மட்டுமே மேற்கொள்கிறது.
இந்நிலையில், தாம்பரம் மற்றும் தஞ்சை விமான படை தளங்களுக்கு தேவைப்படும் மின்சாரத்தை, மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து, மின் வினியோகம் செய்வதற்கு உரிமம் வழங்குமாறு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மிலிட்டரி இன்ஜினியர் சர்வீசஸ் அனுமதி கேட்டுள்ளது.
இதற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், தமிழகத்தில் மின் வாரியத்துக்கு அடுத்து, மின் வினியோகம் செய்யும் உரிமையை பெற்ற முதல் நிறுவனமாக, மிலிட்டரி இன்ஜினியர் சர்வீசஸ் திகழும். ராணுவத்திற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை, இந்நிறுவனம் செய்து வருகிறது.
இதுகுறித்து, ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் வினியோக உரிமம் கேட்கும் நிறுவனம், தன் இணையதளத்தில் அந்த தகவலை வெளியிட்டு, மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். பின், அந்த தகவல்கள் அடங்கிய விபரங்களை மனுவாக ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதை பரிசீலித்து, முடிவு எடுக்கப்படும்.
ஆனால், ராணுவ இணையதளம் அதிக பாதுகாப்பு உடையது என்பதால், தங்களின் மனுவை ஆணைய இணையதளத்தில் வெளியிடுமாறு, மிலிட்டரி இன்ஜினியர் சர்வீசஸ் வலியுறுத்தியது; அதன்படி வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அம்மனுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு கருத்துக்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.